ஸஹ்ரான் குழுவின் ஆயுதப் பயிற்சி வழங்கிய மற்றுமொரு முகாம் | தினகரன்


ஸஹ்ரான் குழுவின் ஆயுதப் பயிற்சி வழங்கிய மற்றுமொரு முகாம்

- திருகோணமலை, மூதூரில் கண்டுபிடிப்பு
- மாவனல்லை வர்த்தகரின்15 ஏக்கர் காணி
- பயிற்சி அளித்த சாதிக் என்பவர் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறுதினத்தன்று பங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய ஸஹ்ரானின் குழு பயிற்சிகளை மேற்கொண்ட பயிற்சி முகாமொன்று குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரணைகள் மூலம் திருகோணமலையின் மூதூரில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றுக்கு தயாரகிக் கொண்டிருந்த ஸஹ்ரான் கும்பலின் பிரதான பயங்கரவாதி ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரமே தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டின் பின்னர் இந்த பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று இந்த இடத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளை நடத்தியுள்ளது.

பயிற்சி முகாம் அமைந்துள்ள இடம் கோழி மற்றும் ஆட்டுப் பண்ணையாக இருந்துள்ளதுடன், இது 15 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளதென குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்டஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸஹ்ரானின் இந்த பயிற்சி முகாமில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பயிற்சிகளை வழங்கியுள்ளவர் சாதிக் எனப்படும் மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாகும்.

ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சிஐடியின் காவலிலேயே சாதிக் வைக்கப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சிப் பெற்றுவந்த சாதிக் வந்த பின்னரே இந்த முகாமில் இளைஞர்களுக்கு பயிற்சிகளை அவர் வழங்கியுள்ளார்.

டி56 ரக துப்பாகிகள் குறித்து மாவனல்லையை சேர்ந்த 5 பேருக்கே சாதிக் இங்கு முதலில் பயிற்சி அளித்துள்ளார்.

மாவனல்லையை சேர்ந்த் பிரபல வர்த்தகர் ஒருவர் இந்த முகாமில் கோழி, ஆட்டுப் பண்ணையை நடத்திச் சென்றுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

(கயான் குமார வீரசிங்க)


Add new comment

Or log in with...