கொரோனா வைரஸ் இலகுவில் எம்மை விட்டு நீங்கி விடாது!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் எஸ்.என்.ரொசாந்த் தரும் விளக்கம்

'கொவிட்19' எனும் கொரோனா வைரஸ் என்பது மிகவும் கொடியதாகும். இதன் பரம்பலை 100வீதம் தடுக்க முடியாது. ஆனால் பரவும் வேகத்தைக் குறைக்க முடியும். எனவே இவ்வைரஸ் பல காலம் மனிதகுலத்துடனேயே பயணிக்கவுள்ளது. அதற்கேற்ப எமது வாழ்வியல் முறைமையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் எஸ்.என்.ரொசாந்த் தெரிவித்தார்.

“இந்த நோய்க்கெதிராக இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. சிலவேளை இலங்கையின் கொரோனாத் தொற்று வரைபு செங்குத்துநிலைக்கு வந்தால் எம்மால் எதுவுமே செய்ய முடியாத துர்ப்பாக்கியநிலை தோன்றவும் வாய்ப்புண்டு” எனவும் அவர் சொன்னார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் தணிந்து வருவதாகக் கூறப்படுவது குறித்து கருத்துக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;

“முகக்கவசம் அணிவதால் சம்பந்தப்பட்டவருக்கு பெரியளவில் பயனில்லை. மாறாக அவர் ஏனையோரைப் பாதுகாக்கிறார். எனவே ஒவ்வொருவரும் 'மாஸ்க்' அணிந்தால் அனைவரும் பாதுகாக்கப்படுவர்.

கொரோனா பரம்பலின் வேகத்தைக் குறைப்பதானால் கட்டாயம் அனைவரும் 3 வழிகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

1.கட்டாயம் கைகழுவ வேண்டும்.

கிருமி எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது கண்ணுக்குப் புலப்படாது. யாரிடம் இருக்கிறதென்பது கூடத் தெரியாது. உண்மையில் இக்கிருமி உள்ளவர்களில் 80வீதமானோர் எவ்வித அறிகுறிகளும் வெளியே தெரியாதவண்ணமிருப்பர். 20 வீதமானோரில் அறிகுறிகள் தெரியும். தடிமல், இருமல், சளி இவ்வாறாக அவை வெளித்தெரியும். மீதி 10 வீதமானோர் காய்ச்சலுடன் சுவாசத்திற்காக அவதிப்படுவர். இந்த அறிகுறிகளை நிட்சயப்படுத்த பொதுவாக 21 நாட்கள் தேவைப்படும். கைகளால் முகத்தை, மூக்கை, வாயைத் தொடக் கூடாது. எனவே அடிக்கடி கையைக் கழுவுவதால் பரம்பலைக் குறைக்க முடியும்.

2.சமூக இடைவெளி

மக்கள் கூட்டம் கூடக் கூடாது. அப்படியொரு நிலை வந்தால் சமூக இடைவெளி கட்டாயம் பேணப்பட வேண்டும். உண்மையில் 2 மீற்றர் இடைவெளி தேவை. தொற்றுள்ள ஒருவர் தும்மும் போது அல்லது உரத்துப் பேசும் போது அவரது நீர்ச் சிதறல்கள் குறைந்தது ஒரு மீற்றருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும். அது பின்பு கீழே வீழ்ந்து விடும். குளிரூட்டப்பட்ட அறைகள், சனச்செறிவான சந்தை, ஒன்றுகூடல், கூட்டம் கூடல், வணக்கஸ்தலங்களில் கூடுதல் என்பன சற்றும் சரிவராது.

3.முகக்கவசம் அணிதல்

தரமான முகக்கவசம் உரியமுறையில் அணிதல் அவசியம். ஒருநாள் பாவித்தால் அதனை அன்றே சவர்க்காரமிட்டுத் துவைத்து நன்கு காய வைத்து அயன் ஸ்திரிக்கை இட்டால் வைரஸ் இறந்து போகும். இவ்வைரசின் பருமன் சற்றுப் பெரிதாகையால் இலேசாக அழிந்து போகும். முகக்கவசத்தின் முற்பகுதியை எக்காரணம் கொண்டும் தொடக் கூடாது.

இந்த மூன்று செயற்பாடுகளையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்காவிட்டால் இவ்வைரைஸ் எளிதில் எம்மை விட்டுப் போகாது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பல காலம் எம்முடன் பயணிக்கும். அதற்கேற்ப நாம் வாழப் பழக வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றை சுகப்படுத்த இதுவரை உலகில் எந்த மருந்துமே கண்டுபிடிக்கப்படவில்லை. சாதாரண வைரசுக்கான பரீட்சார்த்த சிகிச்சை இடம்பெறுகிறது. குழந்தை மற்றும் வயதானவர்கள் மாத்திரம்தான் இதற்கு இலக்கு என்று நினைத்து விட வேண்டாம். பலவயதிலுமுள்ளவர்கள் மரணித்திருக்கிறார்கள்.

தண்ணீரில் ஐஸ்கட்டி மிதப்பதைப் போல்தான் இன்றைய கொரோனா நிலைமை தெரிகிறது. ஆழத்தில் அபாயமுள்ளதை அறியாதிருந்து அலட்சியமாகவிருந்தால் அனைவரும் பாதிக்கப்பட வேண்டி நேரிடும்” என்று வைத்திய நிபுணர் எஸ்.என்.ரொசாந்த் விளக்கமளித்தார்.

வி.ரி.சகாதேவராஜா - காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...