8 மணி நேரம் மரத்தில் சிக்கிய சிறுத்தை மீட்பு

மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில் ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தையொன்று 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 08 மணிநேரம் தவித்தது.

இதனையடுத்து, அச்சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது  உயிருடன் மீட்கப்பட்டது.

மேற்படி தோட்டத்தில் சிறுத்தையொன்று சிக்கியிருப்பதை  அறிந்த தோட்ட முகாமையாளர்  அது தொடர்பில் இன்று (18) காலை மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன் பின்னர் பொலிஸார் ஊடாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.


இதனையடுத்து இராணுவம், பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தோட்ட மக்களும் குவிந்தனர்.

மரக்கறித் தோட்டமொன்றில், மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே 04 வயதான இச்சிறுத்தை சிக்கியுள்ளது என்றும், மக்கள் நடமாட்டத்தை கண்டதும் வலையை பிய்த்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

மரத்தின் உச்சிக்கே சென்ற பிறகு, வலையில் இருந்த பலகைத்துண்டு, மரத்தின் கிளைகளுக்கிடையில் இறுக, கீழ் இறங்க முடியாமல் சிறுத்தை சிக்கிக்கொண்டது.

பின்னர், ரந்தெனிகல மிருக வைத்தியசாலையிலிருந்து, மிருக வைத்திய அதிகாரியொருவர் வரழைக்கப்பட்டு, கீழிருந்து துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டு, சிறுத்தை கீழிறக்கப்பட்டது.

சிகிச்சைகளுக்காக மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு சிறுத்தைப்புலி கொண்டு செல்லப்பட்டது. அது குணமடைந்த பின்னர் சரணாலயத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன், நோட்டன்  பிரிட்ஜ் நிருபர் - வி.முத்துகிருஸ்ணன்)    


Add new comment

Or log in with...