ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது | தினகரன்

ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிதாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, ரியாஜ் பதியுதீன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

புத்தளம் பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

இவருடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவர், புத்தளம், செட்டில்மன் வீதியைச் சேர்ந்தவர் எனவும், இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை CID யினர் மேற்கொண்டுள்ளதாகவும் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனுக்கு இரு சகோதரர்கள் உள்ளனர் அதில் ஒருவர் ரிப்கான் பதியுதீன் மற்றையவர் ரியாஜ் பதியுதீன் ஆவார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் புதிய விசாரணைகளுக்கு அமைய, சீயோன் தேவாலய தாக்குதல்தாரிகளுக்கு உதவியதாக கடந்த மார்ச் 29 ஆம் திகதி ஒருவரும், ஏப்ரல் 02ஆம் திகதி மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...