அக்கரைப்பற்றில் மேலும் ஒருவருக்கு கொரானா தொற்று | தினகரன்


அக்கரைப்பற்றில் மேலும் ஒருவருக்கு கொரானா தொற்று

- ஏற்கனவே தொற்றியவரின் மனைவி அடையாளம்
- மேலும் 51 பேர் தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

அக்கரைப்பற்றில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து இன்று (12) தினகரனுக்கு வழங்கிய பேட்டியிலேயெ அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

கடந்த புதன்கிழமை (08) அக்கரைப்பற்று பகுதியில்  கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். தற்போது குறித்த நபரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கட்டாரிலிருந்து மார்ச் 16 ஆம் திகதி வந்தவர்களில் கல்முனை பிராந்தியத்திற்கு வந்த 07 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சிய 06 பேரினதும் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன் போது அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த நபர் தற்போது வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

தற்போது வரை அவர் உடல் நலத்துடனேயே இருக்கின்றார்.

அவருடன் தொடர்புடைய குடும்பத்தினர் உள்ளிட்ட 10 பேர் பின்னர் பொலன்னறுவை பகுதியில் உள்ள  தம்மின்ன விசேட தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இன்று (12) அதிகாலை கிடைக்கப்பெற்ற பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது மனைவி தற்போழுது   தனிமைப்படுத்தப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஏனைய  09 நபர்களில் 07 பேருக்கு  இந்த நோய் இல்லை என பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் குறித்த நபரை கொழும்பிலிருந்து அழைத்து வந்த வாகனத்தின் சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரின் முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து, குறித்த 10 பேருடன் தொடர்புபட்ட தொடர்புபட்ட 51 பேரையும் தம்மின்ன முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளி அத்துடன் மற்றைய 10 பேர் மற்றும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவுள்ள 51 பேர் உள்ளடங்கலாக 62 பேர் கொரோனா வைரஸ் தொடர்பில் அக்கரைப்பற்றில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

பாறுக் ஷிஹான்


Add new comment

Or log in with...