கிளிநொச்சியில் சிக்கிய வர்த்தகர்கள் | தினகரன்


கிளிநொச்சியில் சிக்கிய வர்த்தகர்கள்

கிளிநொச்சியிலுள்ள பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதோடு,  பொருட்களை பதுக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலையடுத்து இன்று விலைக் கட்டுப்பாட்டு பிரிவினர்,  பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக, சில வர்த்தகர்கள் பிடிபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பிரிவினர், பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் கிளிநொச்சியில்  சில மொத்த வியாபார நிலையங்களுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். 

இதன்போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களான  பருப்பு, ரின் மீன், அரிசி போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு,அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்கள் சிலரை பிடித்துள்ளனர். அத்தோடு, காலாவதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த வர்த்ததக நிலையங்களின் உரிமையாளர்களிடம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களை நியாய விலைக்கு விற்பனை செய்து தங்களது விற்பனைச்  சிட்டை காண்பிக்க வேண்டும் என்று  எழுத்து மூலம் உத்தரவாதக் கடிதம் பெறப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற நடவடிக்கையும் உட்படுத்தப்படவுள்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெருக்கடியான சூழ்நிலையில்  அத்தியாவசியப் பொருட்கள் மீதான செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது  தொடர்ச்சியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

(எஸ்.என்.நிபோஜன்)

 


Add new comment

Or log in with...