கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை | தினகரன்


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்- பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் வீடியோ கொன்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி வருகிறது. இதனால், 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமுலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இன்றோடு 15 நாட்கள் ஆகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 4,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவிலும் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீடிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவ்வகையில், இத்தகைய சூழலில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கொன்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார். பாராளுமன்றத்தில் 5 உறுப்பினர்களுக்கும் அதிகமாக உள்ள கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் எம்பி, திமுக சார்பில் டிஆர் பாலு எம்பி ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் போது கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடவும், தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைகளை வழங்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டார்.


Add new comment

Or log in with...