வீடொன்றில் 03 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது | தினகரன்


வீடொன்றில் 03 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

வீடொன்றில் 03 கைக் குண்டுகளுடன் ஒருவர் கைது-Suspect Arrested with 3 Grenade-Thambalagamuwa-Parakumbura

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் வழங்கியதாக தெரிவிப்பு

தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள பரக்கும்புற பகுதியில் 03 கைக் குண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்பலகாமம் பரக்கும்புற பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தம்பலகாமம்  பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஓன்றின் அடிப்படையில் அவரது வீட்டை சோதனையிட்ட போது மறைத்து வைத்திருந்த நிலையில் மூன்று கை குண்டுகள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கைக்குண்டுகளை, ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் வைத்திருக்குமாறு அவருக்கு வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து, குறித்த இராணுவ வீரரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(திருமலை மாவட்ட விசேட நிருபர் - அப்துல் பரீத், ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...