பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்த பொது மக்கள் | தினகரன்


பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்த பொது மக்கள்

வடக்கில் நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

வடமாகாணத்தில் நேற்று யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதுக்கு முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது. எனினும் சுகாதாரத் பிரிவினர் கூறியது போன்ற சுகாதார முறைகளை பெரிதளவில் மக்கள் கடைப்பிடித்திருக்கவில்லை.

சந்கைள், வியாபார நிலையங்கள், சதொச விற்பனை நிலையங்கள், வங்கிகள் மற்றும் வீதிகளில் மக்கள் கூட்டமாக இருந்ததை காணமுடிந்தது.

வவுனியா

ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் அதிக மக்கள் குவிந்திருந்தனர்.

அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள், எரிபொருள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.

போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் சனநெரிசல் நிலமைகளை கட்டுப்படுத்தியதுடன் வவுனியா பொலிஸாரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலயம், வவுனியா கண்டி வீதி தமிழ் மத்திய மகா வித்தியலாயம் ஆகியவற்றுக்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நகரில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டது.

மன்னார்

மன்னாரிலும் பொருட்களை வாங்குவதுக்கு மக்கள் வழமைக்கு மாறாக பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்தியடித்துக் கொண்டனர். பல்பொருள் விற்பனை நிலையங்களில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர். சந்தை பகுதியில் மக்கள் முந்தியடித்துக் கொண்டு பொருட்களை கொள்வனவு செய்தனர்.

குறிப்பாக மன்னார் புதிய பேருந்து தரிப்பிட பகுதியில் தற்காலிகமாக மரக்கறி விற்பனை நடைபெற்று வந்தது. மக்கள் இலட்சியப் போக்குடன் சமூதாய இடைவெளியின்றி முகக்கவசம் அணியாமல் பொருட்களை கொள்வனவு செய்தனர்.

அவ்வாறு செயற்பட்டவர்களை பொலிஸார் எச்சரித்ததோடு, முகக்கவசத்தை அணியுமாறு வழியுறுத்தினர். மேலும் மன்னார் நகர் முழுவதும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி நகரில் வழமைக்கு மாறாக அதிகளவில் மக்கள் ஒன்று கூடியிருந்தனர். வியாபார நிலையங்கள், சந்தை வங்கிகள், சதொச விற்பனை நிலையம் போன்றன மக்களால் நிறைந்திருந்தன. அதிகளவு மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் நகரின் மையப்பகுதியில் ஒன்று திரண்டமையால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் மக்கள் காலையில் குறைவாக காணப்பட்ட போதும் நண்பகல் நேரம் அதிகளவான மக்கள் கூடத் தொடங்கினர். இதன்போது சுகாதார முறைகளை கடைப்பிடிக்காது அசட்டையீனமாக செயற்பட்டதையும் காண முடிந்தது.

சந்தைகளிலும், சதொச விற்பனை நிலையங்களிலும், வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனினும்  பொலிஸாரும், இராணுவத்தினரும் மக்களை ஒழுங்குபடுத்தும்  செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா விசேட, கிளிநொச்சி குறூப், பரந்தன் குறூப்


Add new comment

Or log in with...