மூன்று வாரங்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் பாதிப்பில் இருந்து தப்பித்துவிட முடியும்

குடாநாட்டு மக்கள் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் தற்போதைய கட்டுப்பாட்டுகளுடன் இருந்துவிட்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் தப்பிவிடலாம் என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ளோம். எனவே அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும்.

அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைவிட சிலர் வெளியில் இருக்க முடியும். அதனால் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்திவிட்டோம் என்று கூறமுடியாது.

எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துவைத்து மக்களின் நடமாட்டைத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய நிலமை உள்ளது. அத்துடன், யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்றுப் பரம்பல் அதிகரித்தால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ அல்லது மாகாண வைத்தியசாலைகளிலோ போதியளவு வசதிகள் இல்லை.

யாழ்ப்பாணத்தில் அடையாளப்படுத்திய முதலாவது நபர் கொழும்புக்கும் ஏனைய 6 பேரும் வெலிகந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.

சுண்டுகுளி நிருபர்


Add new comment

Or log in with...