வயோதிபர், சிறுநீரக நோயாளிகள், விசேட தேவையுடையோருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து மிகவும் கவனம் செலுத்த வேண்டியவர்களாக கருதப்படும் வயோதிபர்கள், விசேட தேவையுடையோர், மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கான 5,000 ரூபா கொடுப்பனவு இன்று 06 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர்  பவித்ரா வன்னியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.

இந்த விடயத்துக்கு முன்னுரிமையளித்து இன்று 06 ஆம் திகதி திங்கட்கிழமை 5,000 ரூபாவை கிராம சேவர்கள் ஊடாக முழுமையாக வழங்கி நிறைவு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இன்று சில பகுதிகளிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனை மிக கவனமாக பயன்படுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனாதொற்றை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மக்ஷிந்த ராஜபக்ஷவும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேடசெயலணியின் ஊடாக தீர்மானிக்கப்பட்டதன் படி வயோதிபர், சிறுநீரக நோயாளிகள் விசேட தேவையுடையோருக்கு 5,000 ரூபாவை வழங்கும் நடவடிக்கை இன்று நடைபெறுகிறது.

இதன்படி தற்போது விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை பெற்றுக்கொண்டிருக்கும் மற்றும் காத்திருப்பு பட்டியலிலுள்ள அனைவருக்கும் இன்று 06 ஆம் திகதி 5,000 ரூபா விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவாக வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். அதேபோன்று சிறுநீரகநோயாளிகளுக்கும் 5,000 ரூபா வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று ஏப்ரல் மாதம் 2,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ள 70 வயதுக்குமேற்பட்ட வயோதிபர்களுக்கும் இன்று மிகுதி 3,000 ரூபாவும் வீடுகளுக்கு வந்து வழங்கப்படும்.

70 வயதுக்குமேற்பட்ட காத்திருப்பு பட்டியலிலுள்ள யோதிபர்களுக்கும் முழுமையாக 5,000 ரூபா இன்று வழங்கப்படும். இன்றைய தினத்துக்குள் கிராமசேவகர்கள் வீடு வீடாகச்சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவிக்கிறது. அத்துடன் சமுர்த்திகொடுப்பனவுகள் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் நாளை 07ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கே. அசோக்குமார்


Add new comment

Or log in with...