சமூக வலைதளங்களை எச்சரித்தும் இன்னும் திருந்தவில்லை | தினகரன்


சமூக வலைதளங்களை எச்சரித்தும் இன்னும் திருந்தவில்லை

தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக முக நூல்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பல தடவைகள் இதுதொடர்பாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டி வருகின்ற போதும் தொடர்ந்தும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வளைதளங்கள் ஊடாக இவ்வாறான பொய் பிரசாரங்ளை முன்னெடுத்து வருகின்றனர். இந் நிலையில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்படுவதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் மக்களுக்குள்ள நம்பிக்கையையும்அது இல்லாமல் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பிலுள்ள கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்கான தேசிய மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பெரும் அர்ப்பணிப்புடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள மருத்துவ அதிகாரிகள் தாதியர்கள் பொது சுகாதாரப் பரிசோதனை அதிகாரிகள், உள்ளிட்டவர்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் பிரசாரங்களை முன்னெடுப்பது கவலைக்குரியது.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று நபர்கள் தொடர்பிலும் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்ட ஒருவரை நேற்று குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் வாத்துவ பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். அவர் ஒரு விளம்பர வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் என்பதுடன் போல் ரூம் டான்சிங் அசோசியேசன் என்ற நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணி புரிகின்றார்.

அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பொய் பிரசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தகையோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கிணங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேவேளை ரம்புக்கன பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் கடமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டு அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள நபர் நேற்று பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று முதலாவது நோயாளி இனங்காணப்பட்ட தினத்திலிருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிசார் மக்களுக்கு தெளிவு படுத்தி வந்துள்ளனர்.

இராணுவத்தினர் தனிமைப்படுத்தல் நிலையங்களை கண்காணித்து வருகின்றனர் 43 ஆயிரத்து 500 பேர்வரை பொலீஸ் நிலையங்கள் மூலம் தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர் அவர்களில் 18,000 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துகொண்டுள்ளனர் மேலும் 25,500 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர் அதற்கான உறுதிப்படுத்தல் சான்றிதழை பெற்றுக்கொள்வது அவசியம் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளப்படும் போது அந்த சான்றிதழ் பத்திரம் விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் முக்கிய ஆவணமாக அமையும் இன்றைய தினம் மேல்மாகாணம் புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஊரடங்குச் சட்டம் எட்டு மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்டுள்ளன அக்காலங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு இணங்க மக்கள் செயற்படுவது அவசியம் ஊரடங்குச் சட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் முச்சக்கர வண்டிகளிலும் அநேகமானோர் அனாவசியமாக திரிவது இனங்காணப்பட்டுள்ளது எந்த ஒரு நபருக்கும் அதற்கான அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...