இத்தாலியில் இருந்து ஆறுதல் தரும் செய்தி! | தினகரன்


இத்தாலியில் இருந்து ஆறுதல் தரும் செய்தி!

கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. அங்கு தற்போது தாக்கம் சற்று குறைந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் ஆறுதல் தருவதாக உள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இத்தாலியில்தான்.ஆனால் ஆரம்ப கட்டத்தில் மக்கள் அதன் தீவிரத்தை உணரவில்லை. அலட்சியமாக இருந்து விட்டனர். உலகம் முழுவதும் இன்று வைரஸ் வேகமாகப் பரவியதற்கு இந்த ஐரோப்பிய நாடுகள்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

இத்தாலியில் ஏப்ரல் 2-,ம் திகதி வரை 1,10,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,155 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மருத்துவ, சுகாதார அதிகாரிகள். இதில் சொல்ல முடியாத வேதனை என்னவென்றால், முதியோர் இல்லங்களில் யாருக்குமே எந்த பரிசோதனையும் எடுக்காமல் அவர்கள் அப்படியே உயிரிழந்தனர். ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லை.. வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமையை மருத்துவமனைகள் தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வயதானவர்களால் ஆஸ்பத்திரிக்கும் செல்ல முடியாமல், அம்புலன்சும் உரிய நேரத்தில் கிடைக்காமல் அவதிப்பட்டதும் நடந்தது. அதனால் மொத்த பலியானோர் எண்ணிக்கை என்பதை அதிகாரபூர்வமாக கணிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது அதாவது மார்ச் 21 இற்குப் பிறகு, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சின்னதாக ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கையயும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் இது ஒரே மாதிரியாக இல்லை. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் இதில் மாறுபாடுகள் உள்ளன.

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, சோதனைகளின் எண்ணிக்கை என்பது தினமும் மாறக் கூடிய ஒன்று. அதை வைத்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்றும் இந்த எண்ணிக்கை அளவு தினமும் மாறிக் கொண்டே இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இத்தாலியில் நோய்த் தாக்கம் திடீரென குறையக் காரணம் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் திட்டம்தான். அதை இத்தாலி தீவிரமாக கடைப்பிடித்து வருவதால் நோய் பரவல் சற்று கட்டுப்பட்டுள்ளது. அதேசமயம் அருகாமை நாடுகளில் இதே போல கடைப்பிடித்தாலும் கூட அங்கு பரவல் குறையவில்லை. அதிகரித்தபடியேதான் உள்ளது.

மார்ச் 10ம் திகதி முதல் இத்தாலியில் லொக் டவுன் அமுலில் உள்ளது. வியாழக்கிழமையன்று இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 760 ஆக இருந்தது. புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4668 ஆக இருந்தது. அதற்கு முதல் நாள் அது 4782 ஆக இருந்தது.

தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிர்ச்சி தரும் நிலையில், தற்போது இத்தாலியில் வரும் பலி எண்ணிக்கை குறைவு என்ற செய்தி சற்று ஆறுதலையே தருகிறது.


Add new comment

Or log in with...