இணையத்தில் போலி செய்தி; பல்கலை மாணவன் உட்பட ஐவர் இதுவரை கைது

இணையத்தில் போலி செய்தி; பல்கலை மாணவன் உட்பட ஐவர் இதுவரை கைது-Fake News-5 Including University Students Arrested-COVID19

சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட இணையதளத்தில் போலியான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பிய ஐவர் CID யினால் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அந்த வகையில், முக்கியஸ்தர்களுக்கு தனியான தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக, பொய்யான செய்தியை பரப்பிய ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படிக்கின்ற மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 09 ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்திகள் தொடர்பில் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்ற இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை பீதிக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் மக்களை பிழையான வழியில் நடத்தி செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக தமக்கு கிடைக்கப்பெறுகின்ற  தகவல் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவ்வாறான தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் அதனை பகிர வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...