வயதானாலும் கிரிக்கெட் விளையாடத் தயார்

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை எனவும், தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளேன் என்றும் அந்த அணியின் சிரேஷ்ட வீரரும், வேகப் பந்துவீச்சாளருமான ஜேம்ஸ் அண்டர்சன் கூறியுள்ளார்.

37 வயதான அண்டர்சன் இதுவரை 584 விக்கெட்டுக்களை வீழ்த்தி டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக விளங்குகின்ற அவர், அண்மைக்காலமாக அடிக்கடி உபாதைகளுக்கும், காயங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றார்.

இறுதியாக கடந்த ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய அவர். இடது விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து விலகி நாடு திரும்பினார்.

முழு உலகையும் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான கிரிக்கெட் தொடர்கள் இரத்தாகியுள்ளதால் கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய வீடுகளுக்குள் முடங்கி விட்டனர்.

இதில் குறிப்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இம்மாத முற்பகுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வருகை தந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அணி வீரர்களை உடனடியாக நாட்டுக்கு திரும்பி அனுப்ப அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

இதனிடையே, கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்திலும் கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், அங்கு நடைபெறுகின்ற அனைத்து முதல்தர கிரிக்கெட் தொடர்களையும் மே மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரும், யோர்க்ஷெயார் அணிக்காக விளையாடி வருகின்ற ஜேம்ஸ் அண்டர்சன், கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகள் இரத்தாகினாலும், தான் ஓய்வு பெறுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் இங்கிலாந்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இனிவரும் காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இன்னும் நான் சிந்திக்கவில்லை.

முன்னைய காலங்களைப் போல மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் வழமைக்கு திரும்பும் என நினைக்கிறேன். இங்கிலாந்து அணிக்காக நீண்டகாலம் விளையாடி வருகிறேன்.

இதுதான் எனது தொழில். அதேபோல, எனக்கு இன்னும் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது.

இங்கிலாந்து அணிக்காக அடுத்து விளையாட கிடைக்கின்ற தொடரில் சிறப்பாக செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இந்த நிலையில், ஜேம்ஸ் அண்டர்சன், தனது வேகப்பந்துவீச்சு சகாக்களான ஸ்டுவர்ட் போர்ட், மார்க் வூட் ஆகியோருடன் தொலைபேசி காணொளி வாயிலான நேரடியாக தொடர்புகொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

“நான் தொலைபேசி காணொளி வாயிலாக ஒருசில வீரர்களுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நேற்றுமுன்தினம் ஸ்டுவர்ட் போர்ட், மார்க் வூட் ஆகியோருடன் இணைந்து பயிற்சிகளை எடுத்தேன். எம்மிடம் Pelotons என்ற உபகரணம் உள்ளது. நாங்கள் அதைப் பயன்படுத்தி பயிற்சிகளை எடுத்தோம்.

இந்தப் பயிற்சியில் ஸ்டுவர்ட் போர்ட் வெற்றி பெற்றதுடன், நான் இரண்டாவது இடத்தையும், மார்க் வூட் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டோம்” என தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி, எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது. 

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அண்டர்சன், எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும். The Hundred போட்டித் தொடர் அல்லது டி20 பிளாஸ்ட் தொடர்களில் எது நடைபெற்றாலும் பரவாயில்லை. இந்த இரண்டு தொடர்களிலும் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் உள்ளேன்.


Add new comment

Or log in with...