இந்தியாவில் நேற்று வரை 1,071 பேருக்கு கொரோனா தொற்று

99 பேர் குணமடைந்தனர்; 29 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1071ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. அதன்படி நேற்று வரை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 99 பேர் குணமடைந்துள்ளதாகவும், 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் முடக்க நிலை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி முடிவுக்கு வரும் நிலையில், அதை நீடிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் வியப்பளிப்பதாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கௌபா தெரிவித்துள்ளார்.

'இப்போதைக்கு முடக்க நிலையை நீடிப்பதற்கு மத்திய அரசுக்கு திட்டமில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று நேபாளத்தில் அமுலில் இருந்து வந்த முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படுவதாக நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டதை அடுத்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய - நேபாள எல்லையில் அந்த நாட்டின் குடியேற்றப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள திடீர் முடக்க நிலையால், வேலைவாய்ப்பை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இன்றி சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியிலிருந்து அருகிலுள்ள உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மக்கள் நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு 1,000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்வதாக அம்மாநில அரசு அறிவித்தது. எனினும், அந்தப் பேருந்துகளில் ஏறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் சமூக விலகலை பொருட்படுத்தாது முயல்வதால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வாழும் டெல்லியைச் சேர்ந்தவர்களுக்கு தனது அரசு அனைத்து உதவிகளை செய்யும் என்று உறுதியளிப்பதாகவும், அதே போன்று டெல்லியில் வாழும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மக்களின் பாதுகாப்பை டெல்லி அரசு உறுதிசெய்ய வேண்டுமென்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலத்துக்குத் தேவையான மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட இன்றியமையாத வசதிகளைக் கொண்டு சேர்க்கும் பணியில் எயார் இந்தியா விமானங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சூழ்நிலையை பொறுத்திருந்து கவனித்து, அதற்கேற்றவாறு முடிவெடுப்போம்' என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலையின் காரணமாக, கேரளாவில் மதுபானக் கடைகள் முடப்பட்டுள்ளன. இதனால் அந்த மாநிலம் முழுவதும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களுக்கு மதுபானம் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இணையதளம் வாயிலாக மதுபானம் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இதேவேளை தமிழகத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதால், நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை   67ஆக அதிகரித்தது. தமிழக மாநிலம் முழுவதும் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளன.   தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் இரண்டாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.


Add new comment

Or log in with...