சீனாவின் தவறு, அலட்சியம்; உலகில் இத்தனை உயிரழிவு

கொரோனா வைரஸ் பரவல் குறித்து உலகை எச்சரிக்க போதுமான நேரம் இருந்தும், வாய்ப்பு இருந்தும் கூட சீனா உலகிற்கு கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை மறைத்து இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கோரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க 170 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த வைரஸை 'சீன வைரஸ்' என்று கேலி செய்து கொண்டு இருந்த அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக 104,256 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த வைரஸ் குறித்து சீனா நினைத்து இருந்தால் டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே உலகை எச்சரித்து இருக்க முடியும் என்று ONE INDIA TAMILஎன்ற இந்திய ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனால் சீனா அதைச் செய்யவில்லை. இந்த வைரஸ் எப்போது தோன்றியது, எப்படிப் பரவியது என்ற முழு விபரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. பலரும் நினைப்பது போல கொரோனா வைரஸ் ஜனவரி மாதத்தில் உலகில் தோன்றவில்லை. இந்த வைரஸ் சீனாவின் உள்ள வுகான் நகரில் டிசம்பர் 1ம் திகதி 2019 இலேயே தொடங்கி விட்டது. 53 வயது நபர் ஒருவருக்கு இந்த வைரஸ் தோன்றியது. சீனாவின் வுகானில் உள்ள கடல் உணவகம் தொடர்பான சந்தை ஒன்றின் மூலம் வைரஸ் பரவியது என்று கணிக்கப்படுகிறது.

இந்த நபருக்கு கொரோனா வந்த 4 நாட்களில் இவரின் மனைவிக்கும் கொரோனா தாக்கியது. ஆனால் அப்போது இது கொரோனா வைரஸ் தாக்குதல் என்று யாருக்கும் தெரியாது. அதிதீவிர காய்ச்சல் என்றுதான் கூறப்பட்டது. மருத்துவமனையிலும் கூட  இவர்கள் மற்ற நோயாளிகளுடன்தான் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த வைரஸ் குறித்து முதலில் யாருமே கணிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இது ஒருவேளை சார்ஸ் வைரஸாக இருக்குமோ என்று கூட யாரும் கணிக்கவில்லை.

அதன் பின்னர் டிசம்பர் இரண்டாம் வாரத்தில்தான் இந்த வைரஸ் வேகம் எடுக்கத் தொடங்கியது. அங்கு வரிசையாக அருகருகே இருக்கும் மருத்துவமனைகளில் பலர் கொரோனா பாதிப்போடு வந்து சேர்க்கப்பட்டனர். எல்லோருக்கும் ஒரே மாதிரி காய்ச்சல். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்தன. இதுதான் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை வரவழைத்தது.

சரியாக டிசம்பர் 25ம் திகதி அந்த திகிலான சம்பவம் நடந்தது. வுகானின் இருக்கும் இரண்டு மருத்துவமனைகளில் உள்ள 6 மருத்துவர்களுக்கு இதே வைரஸ் தாக்கியது. போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் கூட அவர்களுக்கு நோய் தாக்கியது. அப்போதுதான் 'நாம் இப்போது சிகிச்சை அளிக்கும் விஷயம் சாதாரண காய்ச்சல் அல்ல, அது கொஞ்சம் ஆபத்தானது' என்பதை சீன மருத்துவர்கள் உணர்ந்து கொண்டனர்.

சீனாவின் வுகான் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த லி வென்லியாங் என்ற மருத்துவர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாதத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டார். சீனாவில் இருக்கும் வுகான் மத்திய மருத்துவமனையில்தான் லி வென்லியாங் வேலை செய்தார். அங்குதான் இந்த வைரஸ் தாக்குதல் உள்ள நபர் முதலில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் டிசம்பர் முதல் வாரத்தில் காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதி ஆகியுள்ளார். இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கி இருக்கிறது.இந்த வைரஸை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். அத்தோடு உடனடியாக அவர் மருத்துவர்கள் இருக்கும் 'வட்ஸ் அப்' குழு ஒன்றில் அந்தச் செய்தியை பகிர்ந்துள்ளார். சீனா அரசு உடனே இவரை முடக்கியது. இவருக்கு எதிராக சீன அரசு வழக்குத் தொடுத்தது.

'இந்த வைரஸ் குறித்து எதுவும் பேசக் கூடாது. யாரிடமும் விவாதிக்கக் கூடாது. வலைத்தளங்களில் குறிப்பிடக் கூடாது' என்று எச்சரித்துள்ளனர். அத்தோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். ஆனால் சில நாட்களில் இவருக்கும் கொரோனா ஏற்பட்டது. இவர் அதன் பின்னர் கொரோனா குறித்து பேசவில்லை.

சீனா இங்கு மட்டும் உண்மையை மறைக்கவில்லை. ஹூபே மருத்துவக் குழு உடனடியாக வுகான் சென்று அதுவரை ஆராய்ச்சிகளுக்காக அங்கு மருத்துவர்கள் சேர்த்து வைத்து இருந்த கொரோனா மாதிரிகளை அழித்தது. நோயாளிகளிடம் இருந்து மருத்துவர்கள் எடுத்து வைத்து இருந்த கொரோனா மாதிரிகளை எல்லாம் அந்தக் குழு மொத்தமாக அழித்து. அத்தோடு இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது என்றும் சீனா உறுதி அளித்தது. கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாது என்று சீனா கூறியது. சீனாவின் நாளிதழ்களில் இதே உறுதியான செய்தி வந்தது. மிக மோசமான காய்ச்சல் சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்று மட்டும் சீனா கூறியது.

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் தன்மை கொண்டது இல்லை என்று டிவிட் செய்து இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் நிறைய திருப்பங்கள் நடந்தன. ஜனவரி 8ம் திகதி இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் ஆதாரம் இல்லை என்று சீனா கூறியது. ஆனால் ஜனவரி 11ம் திகதி சீனாவில் முதல் நபர் இதனால் பலியானார். 61 வயது முதியவர்  சீன சந்தை ஒன்றுக்குச் சென்ற பின்னர் வைரஸ் தாக்கிப் பலியானார். இன்னொரு பக்கம் இந்த வைரஸ் குறித்து எச்சரித்த டொக்டருக்கு கொரோனா வந்தது. ஜனவரி 10ம் திகதி லிவென்லியாங் காய்ச்சல் வந்து படுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். அதன் பின்னர் இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் பெப்ரவரி 7ம் திகதி கொரோனா வைரஸால் இவர் தாக்கப்பட்டு பலியானார். இவரை தற்போது சீன மக்கள் தங்களின் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள். அதன் பின் ஜனவரி 13ம் திகதி சீனாவிற்கு வெளியே தாய்லாந்தில் உள்ள சீனப் பெண் ஒருவருக்கு கொரோனா வந்தது. இவர் அந்த மீன் சந்தைக்குச் சென்றது இல்லை. ஆனாலும் வேறு யார் மூலமோ இந்த வைரஸ் அவருக்குப் பரவி உள்ளது. இவர் வுகானில் இருக்கும் வேறு சில சந்தைக்கு சென்று இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி இந்த வைரஸ் அவரைத் தாக்கி இருக்கலாம்.

ஜனவரி 15ம் திகதிதான் சீன அரசு கொரோனா வைரஸ் தாக்குதலை ஒப்புக் கொண்டது. அத்தோடு இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்பதையும் சீனா ஒப்புக் கொண்டது. ஆனால் அப்போதே சீனாவில் 100 பேருக்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்னும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருந்தது.

ஜனவரி 19ம் திகதி கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியும் நிலையில்தான் இருக்கிறது என்று சீனா கூறியது. ஆனால் சீனாவிற்கு வெளியே அப்போதே கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி விட்டது. ஜனவரி 20இல் வோஷிங்டனில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. சீனாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்தான் இந்த வைரஸின் தீவிரத் தன்மையை சீனா உணர்ந்தது. ஜனவரி 22ம் திகதிதான் சீனா வுகானில் இறங்கி சோதனை செய்தது. அதன் பின்தான் சீனா வுகான் நகரை மூடியது. சரியாக வைரஸ் தோன்றி ஒன்றரை மாதம் கழித்துத்தான் அதன் வீரியத்தை சீனா உணர்ந்தது. அதன் பின்னர்தான் சீனா இந்த வைரஸ் பரவல் குறித்து ஒப்புக் கொண்டுஇ வுகான் நகரத்தை மூடியது. அதுவரை சீனா அனைத்தையும் மறைத்தது.

சீனாவின் அரசியலும், ஆட்சி அதிகாரமும்தான் இதற்குக் காரணம். மொத்த அதிகாரமும் ஜனாதிபதி ஜிங்பிங்கிடம் குவிந்துள்ளன. அவர் சொல்வதுதான் அங்கு சட்டம். அவரை மீறி யாரும் எதுவும் பேச முடியாத சூழ்நிலை. இதுதான் அங்கு வெளிப்படைத்தன்மை இல்லாமல் போனதற்கு காரணம். உலகம் மொத்தமும் மொத்தமாக நடுங்குவதற்கும் இதுதான் காரணம்.

இவ்வாறு இந்திய ஊடகம் ONE INDIA TAMILகுறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...