மெய்வல்லுநர் நடுவர் தரப்படுத்தலில் சாய்ந்தமருதைச் சேர்ந்த அம்ஜத் சித்தி

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் தேசிய ரீதியில் மெய்வல்லுநர் நடுவர்களுக்காக நடாத்தப்பட்ட தரப்படுத்தல் தரம் 111 ( Grade 111 ) பரீட்சையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ்.ஐ.எம்.அம்ஜத் சித்தியடைந்துள்ளார்.

ஆங்கில மொழி மூலம் நடத்தப்பட்ட இந்த பரீட்சையில் 86 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது நிலையில் இவர் சித்தியடைந்துள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கல்லூரி காலங்களில் வலய மட்டம் , மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டங்களில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் தொடர்ச்சியாக வெற்றியீட்டி பாடசாலைக்கும் கல்முனைப் பிரதேசத்திற்கும் பெயரையும் புகழையும் ஈட்டித்தந்தவர்.

இலங்கையின் பல பகுதிகளிலும் நடைபெறும் தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் மத்தியஸ்தராகவும் நடுவராகவும் கடமையாற்றிவரும் இவர் புத்தளம் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வித்துறை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

இப்பரீட்சையில் 88 புள்ளிகளை பெற்றவர் முதலாம் , நிலையிலும் , 87 புள்ளிகளைப் பெற்றவர் இரண்டாம் நிலையிலும் உள்ளனர்.

இப்பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்தவராக கருதப்பட்டனர்.

60 புள்ளிகளுக்காக நடாத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையில் 56 புள்ளிகளையும் , 40 புள்ளிகளுக்காக நடத்தப்பட்ட வாய்மூல கேள்விப் பரீட்சையில் 30 புள்ளிகளையும் இவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2011 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மேற்படி தரம் 4 இற்கான பரீட்சையில் இவர் சித்தியடைந்திருந்தார்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...