உணவுக்கும் கொரோனாவுக்கும் முடிச்சுப் போடும் சமூக ஊடகங்கள்

ஆதாரமற்ற செய்திகளை புறக்கணித்து விடுங்கள்!

இப்பொழுது சமூக வலைத்தளங்களுக்கு பெரிய தீனி என்றால் அது கொரோனா வைரஸ்தான்! எங்கு பார்த்தாலும் இந்த கொரோனா வைரஸ் பீதிதான் பரவிக் கிடக்கிறது. மக்கள் இந்த வைரஸின் பரவலைக் கண்டு பீதியடைந்து போய் இருக்கிறார்கள். யாராவது இருமினால் கூட நமக்குப் பரவி விடுமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பார்க்க முடிகின்றது.

இதற்கு இடையில் சமூக வலைத்தளங்களிலும் மக்களுக்கு தீனி போடும் வகையில் கருத்துகள் பரிமாறப்படுகின்றன. பொய்யா அல்லது உண்மையா என்று கூட தெரியாமல் சமூகவலைத்தளங்களில் எதையாவது பரப்பிக் கொண்டே இருக்கின்றனர். ஏதாவது புதிதாக காய்ச்சல் வந்தாலே அதற்கும் நாம் உண்ணும் உணவிற்கும் முடிச்சு போடுவது எப்போதும் மக்களின் வேலையாகி விட்டது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவத்தால் உணவுப் பொருட்கள் வழியாக கூட இது பரவுகிறது என்று வதந்திகள் சமூகவலைத்தளங்களில் உலவின. மக்கள் பலரும் இவற்றைப் பற்றிய தவறான வதந்திகளை நம்பி மீன், இறைச்சி ஆகியவற்றை உண்பதற்குப் பயந்தனர். குறிப்பாக கோழி இறைச்சியை கண்டிப்பாக உண்ண வேண்டாம் என்ற கருத்து சமூகவலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் எவை? உண்மையில் அவை பாதிப்பை ஏற்படுத்துமா? இவை பற்றியெல்லாம் மக்கள் நன்கு அறிந்து கொள்வது அவசியம்.

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் பகுதியில் கோரத் தாண்டவம் ஆடி தற்போது பெரிதும் ஓய்ந்திருக்கிறது. இருப்பினும் சீனாவில் உள்ள மக்கள் இப்போது தினமும் சந்தைக்குச் சென்று மீன், இறைச்சி, கடல் உணவுகள்,ஆடு, பன்றி, பாம்பு போன்ற அவர்களது இறைச்சி உணவுகளை வாங்கவும், விற்கவும் செய்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியாகவும் கைகளால் முகத்தைத் தொடுவதன் மூலமும்தான் அதிகம் பரவுகிறது. எனவே கடல் உணவிற்கும் கொரோனா வைரஸூக்கும் நெருங்கிய தொடர்பு எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே மக்கள் சமூகவலைத்தளங்களில் பரவும் வீண் வதந்திகளை நம்பி பீதி அடையக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சமீபத்தில், ஒரு சீன நபர் வெளவால் சூப் குடிப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. உடனே மக்களும் வெளவால் இறைச்சி வழியாகத்தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று நம்பத் தொடங்கி விட்டனர். கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் நம்பினாலும், இன்னும் இதை தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. உறுதியான முடிவுகள் எதுவும் தெரியவில்லை. வெளவால், பாம்பு மற்றும் கொரோனா வைரஸ் இவற்றிற்கிடையேயான தொடர்பை இன்னமும் மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

முடிச்சுப் போடுவதில் சமூகவலைத்தளங்கள் துரிதமாகச் செயற்படுகின்றன.மக்கள் இறைச்சி உண்ணும் போது செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நன்றாக சமைத்து உண்ண வேண்டும். வேகாத நிலையில் உண்ணக் கூடாது. இது கொரோனா வைரஸ் மட்டுமல்ல விலங்குகள் மூலம் பரவும் மற்ற வைரஸ்களும் உங்களை தாக்காமல் இருக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே மக்கள் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளைப் படிப்பது தவறில்லை. ஆனால் அது எல்லாம் உண்மையா என்பதை உணர்ந்து செயல்படுவது வீண் பயத்தை போக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


Add new comment

Or log in with...