வீட்டிலிருந்து வேலை; விரிவான சுற்றுநிருபம்

வீட்டிலிருந்து வேலை; விரிவான சுற்றுநிருபம்-Work From Home-Circular-Presidential Secretary

- தொலைபேசி, e-mail, SMS தொடர்பாடல் மூலம் அல்லது கோப்புகளை (file) பெற்று பணிகளை மேற்கொள்ளல்
- சுகாதாரம், உள்ளூராட்சி, போக்குவரத்து, வங்கி, உணவு விநியோகம், நீர், மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் மற்றும் உரம் விநியோகம், நெல் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சேவைகள் இடம்பெற வேண்டும்
- தனிப்பட்ட தொலைபேசிக்கான செலவுக்கு உரிய நிவாரணம்

நாளை மார்ச் 20 முதல் 27 வரையான காலத்தை அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கம் ஏற்கனவே பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் விரிவான விடயங்களை உள்ளடக்கிய சுற்றுநிருபமொன்றை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக, மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரச, தனியார் துறைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் மாத்திரமல்லாது பொதுமக்களும் இணந்து அதனை கடைப்பிடிப்பது பொறுப்பாகும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடங்காதிருக்கும் வகையில், தொடர்ந்தும் பொதுச் சேவைகளை முன்னெடுத்துச் செல்வது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தொடர்பாடல் வசதிகள் மூலம் மார்ச் 20 - 27 வரையான குறிப்பிட்ட நாட்களில் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதோடு, எதிர்வரும் நாட்களில், தெரிவு செய்யப்பட்ட ஒரு சில அரசாங்க சேவைகளை தொலைதூர முறைமையின் கீழ் நடைமுறைப்படுத்த, இந்நடவடிக்கையை முன்னோட்டமாக கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியை அரசாங்க விடுமுறை தினங்கள் இல்லை எனவும், சனி, ஞாயிறு (21, 22) ஆகிய இரு தினங்களை மாத்திரம் வழமையான அரச விடுமுறையாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில், சுகாதாரம், உள்ளூராட்சி, போக்குவரத்து, வங்கி, உணவு விநியோகம், நீர், மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் மற்றும் உரம் விநியோகம், நெல் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை இடையறாது மேற்கொள்வது தொடர்பில் உரிய அதிகாரிகளினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்ட செயலகம், பிரதேச செயலக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி, e-mail, SMS தொடர்பாடல் மூலம் அல்லது கோப்புகளை (file) பெறுதல் உள்ளிட்ட  விடயங்கள் மூலம் இச்சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் அலுவலகங்களில் ஒன்றுகூடுவதை தடுத்து, பொதுமக்கள் சேவைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என்பதால், அச்சேவைகளை தொலைபேசிகள், e-mail போன்ற முறைகளின் ஊடாக அப்பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமது தனிப்பட்ட தொலைபேசியை பயன்படுத்தப்படுவதனால் மேலதிக செலவு ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கத்தினால் உரிய நிவாரணம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மனிதாபிமான நடவடிக்கைகளில் அனைத்து அரசாங்க அதிகாரிகளும் தொடர்ச்சியாக சேவைகளை நடைமுறைப்படுத்திச் செல்ல, உரிய முறையை பின்பற்றி செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாரிய அளவில் பரவாதிருப்பதை தடுப்பதே முக்கியமான நோக்கம் என்பதாலும், ஒவ்வொரு நிறுவனத்தினாலும் வழங்கப்படும் சேவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்பதாலும், தமது அலுவலக ஊழியர்களை தெளிவூட்டி ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது தொடர்பில் தங்களது நிறுவனத்திற்கு ஏற்ற முறையை நடைமுறைப்படுத்துவது குறித்த நிறுவன பிரதானியின் பொறுப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பிரிவும் குறித்த முறையை பின்பற்றி தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து வர்த்தக சபைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை; விரிவான சுற்றுநிருபம்-Work From Home-Circular-Presidential Secretary


Add new comment

Or log in with...