எல்லைகளை மூட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் | தினகரன்


எல்லைகளை மூட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

கொரோனா வைரஸ் காரணமாக எல்லைகள் அனைத்தையும் மூட ஐரோப்பிய ஒன்றியம்முடிவு செய்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உருவானகொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள லம்போர்டி பிராந்தியத்தில் கடந்த மாத தொடக்கத்தில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.அதன்பின்னர் அடுத்த சில நாட்களிலேயே அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமானளவு  உயர்ந்தது.  அத்தோடு நாளுக்குநாள் உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கின. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம்கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

ஆனாலும் வைரசின் தாக்கத்தை குறைக்க முடியவில்லை. மாறாக வைரஸ் பரவலின் வேகம் முன்பை விட பல மடங்கு அதிகரித்தது.இதற்கிடையில் இத்தாலியில் இருந்துஏனையஐரோப்பிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.

அதன்படி இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவலின் மையம் சீனாவில் இருந்து ஐரோப்பாவுக்கு மாறியுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஐரோப்பாவுக்கு முற்றிலுமாக பயண தடையை அறிவித்துள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பாவின் எல்லைகள் அனைத்தையும் மூட ஐரோப்பிய கமிஷன் முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.

எல்லைகளை மூடுவதன் மூலம் தேவையற்ற பயணத்தை தவிர்த்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என அவர் கூறினார். ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி 30 நாட்களுக்கு எல்லைகள்மூடப்படும் என உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.

இதனிடைய ஐரோப்பிய கூட்டமைப்புடனான பிரான்சின் எல்லைகள்  மூடப்படுவதாக அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் அறிவித்தார்.

சுகாதார ரீதியிலான ஒரு போரில் தற்போது நாம் உள்ளோம் என்று கூறிய அவர் இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை போல அலுவலகங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை கட்டாயமாக மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்தார். (மாலைமலர்)


Add new comment

Or log in with...