சார்க் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

கொரோனா வைரஸுக்கு எதிராக  ஒன்றுபட்டு செயற்படுவோம்

*அமைச்சு மட்ட செயலணி அமைக்க யோசனை

*திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் நடைபெறுமெனவும் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சார்க் நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அதற்காக சார்க் அமைச்சர்கள் மட்ட செயலணி அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். வைரஸ் பரவுவதைத் தடுக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுத்துள்ளதாக கூறிய அவர் திட்டமிட்டபடி ஏப்ரல் 25 இல் பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நேரலை வீடியோ கலந்துரையாடலில் உரையாற்றியபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷமேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோன வைரஸுக்கு எதிராக ​செயற்படுவதற்கு ஒன்றிணைந்த வியூகமொன்றை தயாரிப்பது தொடர்பில் இதன் போது சார்க் நாட்டு தலைவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த நேரலை வீடியோ கலந்துரையாடலை ஒழுங்கு செய்து அதனை வழிநடத்தினார்.

இந்த காணொலிச் சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங், பங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் ஜாபர் மிர்ஸா ஆகியோர் இணைந்தார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ, வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தீர்மானித்துள்ளோம். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு சமூக ஒன்றுகூடல்களை தற்காலிகமாக தவிர்க்குமாறு அறிவித்துள்ளோம். முதலில் சீனப்பெண் ஒருவரே அடையாளம் காணப்பட்டதோடு அவர் குணமடைந்து நாடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

விசேட வைத்தியசாலை ஒன்றின் ஊடாக நாங்கள் இந்த நோயாளர்களை பராமரித்து வருகிறோம். நோயாளர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நோயாளர்கள் இருந்த பகுதிகள் சுகாதார அதிகாரிகளால் கவனிக்கப்படுகின்றனர். விசேட செயலணி ஒன்றின் மூலம் இதற்கான நடவடிக்கை எடுத்து 24 மணிநேர அலுவலகம் ஒன்றை இயக்கி வருகிறோம்.

மேலதிக நடவடிக்கைகளை எடுத்துள்ள அரசு இந்த வைரஸ் பரவுவதை தடுக்க இயலுமானவரை முயற்சிக்கிறது. ஊடகங்களின் வாயிலாக தேவையான அறிவுறுத்தல்களை வழங்குகுறோம். 12 வைத்தியசாலைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

முதலில் சீனாவில் இருந்து பாதுகாப்பாக நாம் 34 மாணவர்களை கொண்டுவந்தோம். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்களின் பின்னர் அனுப்பப்பட்டனர். அவர்களில் யாருக்கும் பாதிப்பில்லை.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கூட்டம் அதிகம் திரளும் என்பதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்துள்ளோம்.

தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும். சமயத் தலைவர்கள் தலையீட்டால் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

விஸா வழங்கலை இடைநிறுத்தி பயண அறிவுறுத்தல்களை நாம் வழங்கியுள்ளோம். பொதுப் போக்குவரத்தும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. சுற்றுலாத்துறை பாதிப்படைந்து ஏற்றுமதியில் தாக்கங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சார்க் அமைச்சர்கள் மட்ட செயலணி அமைக்கப்பட்டு இதற்குரிய நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும்.

சகல சார்க் நாடுகளும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இந்திய பிரதமர் மோடி இதுவரை 150க்கும் குறைவானவர்களே தெற்காசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸை எதிர்கொள்ளும் எங்களின் தாரக மந்திரம் என்பது தயாராக வேண்டும், பதற்றமோ அச்சப்படவோ கூடாது ஒருங்கிணைந்து கரோனாவை எதிர்க்கத் தயாராக இருப்போம், ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.

சார்க் நாடுகள் இணைந்து கொரோனாவுக்கு எதிராக செயற்பட வேண்டும் என சார்க் தலைவர்கள் பலரும் கோரியதோடு இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரினர்.


Add new comment

Or log in with...