தேசியப் பட்டியலினூடாக மர்ஜான் பளீலை நியமிக்க பொதுஜன பெரமுன முடிவு

ஸ்ரீலங்கா ​பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பேருவளை  முன்னாள் நகரபிதாவும் அரச ஹஜ் கமிட்டியின் தலைவருமான மர்ஜான் பளீலை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக மர்ஜான் பளீலுக்கு அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பஷீல் ராஜபக்‌ஷ தொலைபேசி மூலம்  இது பற்றி அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதும் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மர்ஜான் பளீலின் இல்லத்தில் ஒன்று திரண்டு, அவருக்கு தமது முழு அளவிலான ஆதரவுகளையும் உளம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். தங்களது பூரண ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்குவதாகவும் இதன்போது அவர்கள் குறிப்பிட்டனர்.  

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மர்ஜான் பளீல்,  

முதலில் இறைவனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தை எனது சமூகத்தின் நலனுக்காகவும் சமூகத்தின் குரலாகவும் பயன்படுத்துவேன். மேலும் எனது தந்தையார் மர்ஹூம் பளீல் ஹாஜியாரின் 35 வருட கால தூய்மையான மக்கள் சேவைக்கு கிடைத்த ஒரு பரிசாகத்தான் இதனை கருதுவதாகவும் சந்தர்ப்பங்கள் பதவிகள் அவரை தேடி வந்தபோதிலும் எவ்வித கட்சி மாறலுமின்றி சு.கவின் வளர்ச்சிக்காக அவர் தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்தார். அதேபோல் எந்த சமூகத்துக்காக இறுதிவரை அவர் சேவையாற்றினாரோ அந்த சமூகத்தின் நலனுக்காக தானும் கட்சி பேதமின்றி சேவையாற்ற தன்னை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்த அவர், எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த நியமனம் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷ ஆகியோர் எவ்வித இனவாதமுமற்றவர் என்பதை சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு கைமாறாக எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றிக்கு முஸ்லிம் சமூகம் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அதன் மூலமே சமூகத்தின் தேவைகளை நிவர்த்திக்க முடியும். மேலும் இவர்களை இனவாத சாயம் கொண்டு பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமுமாகும்.  

இந்த தேசிய பட்டியல் நியமனத்தின் மூலமாக, விசேடமாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எனது மாவட்ட முஸ்லிம்களை கௌரவித்துள்ளார். 

மேலும் தேசிய பட்டியல் நியமனம் எனக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக நின்ற எமது மாவட்ட அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பேருவளை தொகுதி அமைப்பாளர் பியல் நிசாந்த, முன்னாள் பேருவளை நகர பிதா மில்பர் கபூர் ஆகியோருக்கு எனது பேருவளை தொகுதி வாழ் மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மர்ஜான் பளீல் இதன்போது தெரிவித்தார்.   

(அஜ்வாத் பாஸி)  


There is 1 Comment

Add new comment

Or log in with...