தவக்கால சிந்தனை

பொறுமையோடு

இறைவனுடைய மன்னிப்பும் இரக்கமும் எத்தகையது என்பதை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நற்செய்தி வாசகத்தில் ‘ஊதாரிப் பிள்ளையின் உவமை’ தரப்படுகின்றது. இந்த உவமை ‘இரக்கத்தின் தந்தையினுடைய உவமை’ என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கே ஊதாரி மகனை அடிப்படையாக வைத்தே இது ஊதாரிப் பிள்ளை உவமை என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் தந்தைதான் ஊதாரியாக இருக்கின்றார். அன்பில், மன்னிப்பில், இரக்கத்தில் அவர் ஊதாரியாக, பெருந்தன்மை கொண்டவராக இருக்கின்றார். எனவே இந்த உவமையை ‘ஊதாரிப் பிள்ளையின் உவமை’ என்று சொல்வதைவிட ‘ஊதாரித் தந்தையின் உவமை’ என்று சொல்வதே பொருத்தமானது.

தந்தையிடமிருந்து சொத்தைப் பிரித்துக்கொண்டு சென்ற மகன் ஊதாரியாக வாழ்ந்து தன் நண்பர்களுடன் சேர்ந்து சொத்தையெல்லாம் அழிக்கின்றான். ஈற்றில் வறுமையில் வாடுகின்றான். வேலைதேடி அலையும் அவன் பன்றி மேய்க்கும் தொழிலுக்குச் செல்கின்றான். பன்றிகள் உண்ணும் உணவினால் தனது வயிற்றை நிரப்ப விரும்புகின்றான். ஆனால் அதைக்கூட அவனுக்கு வழங்குவார் யாருமில்லை. அறிவுதெளிந்து அவன் தன்னிலை உணர்கின்றான். தன் தந்தையிடம் திரும்பிச்செல்ல அவன் தீர்மானிக்கின்றான். அவன் தந்தை தன் மகனுக்காக ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார். தன்னிடம் திரும்பிவந்த மகனை அவர் அன்போடு ஏற்றுக்கொள்கிறார். இரக்கம் மிகுந்த நம் வானகத் தந்தையின் நிபந்தனையற்ற அன்பை நாம் இங்கு கண்டு மகிழ்கின்றோம்.

தவக்காலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் நாமும் அந்த ஊதாரி மகனைப்போல, “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்” என்று ஆண்டவரிடம் சொல்வோம். நமது பாவ நிலையை ஏற்றுக்கொண்டு இறைவனின் இரக்கத்திற்காக, மன்னிப்பிற்காக மன்றாடுவோம். “அவர் நம்மீது இரக்கம் காட்டுவார், நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார். நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார்” என்கிறது இன்றைய முதலாம் வாசகம். ஆண்டவரின் அளவுகடந்து இரக்கத்தில் நம்பிக்கை வைப்போம். அவருடைய இரக்கமும் மன்னிப்பும் நம்மில் பொழியப்பட இறைவரம் வேண்டுவோம்.


Add new comment

Or log in with...