ஒருவரின் இதயத்துடிப்பை அடுத்தவர் ஏந்திக்கொண்டு... அகப்பாடல் தரும் காதலின் காத்திருப்பு | தினகரன்


ஒருவரின் இதயத்துடிப்பை அடுத்தவர் ஏந்திக்கொண்டு... அகப்பாடல் தரும் காதலின் காத்திருப்பு

மிகவும் விரைவாகச் செல்தலை ‘வாயு வேகம் மனோ வேகம்’ என்று கூறுவது வழக்கம். அதே சொற்றொடரை புலவர் மாசாத்தியார் (அகம்.384) இவ்வாறு பயன்படுத்தியுள்ளார். 

 நெடிய போர் முடிவுக்கு வந்தது. அவனுடைய அரசன் மாற்றானுடன் புரிந்த போரில் வெற்றி பெற்றுப் பாசறைக்குத் திரும்பிவிட்டான். வீரனுடைய ஊர் நெடுந்தொலைவுக்கு அப்பால், முயற்குட்டிகள் தாவித் திரியும் அழகிய முல்லைநிலக் காட்டின் அருகே, வரகுக் கொல்லைகள் சூழ்ந்துள்ள ஒரு சிற்றூர்.  

அங்கே இருக்கும் தன் இல்லத்தில் மனைவி அவனுக்காகக் காத்திருக்கிறாள். பல நாள்களுக்கு முன்பு தன்னுடைய அரசனுக்காகத் தான் ஆற்ற வேண்டிய கடமைக்காகப் புறப்பட்டுச் சென்றவனுடைய மனத்தில் இப்போது மனைவியின் நினைவு வந்துவிட்டது. 

 விரைவாகச் சென்று அவளைக் காண விரும்பியவன் தன் தேரில் ஏறிக் கொள்கிறான். தேர் புறப்படுகின்றது. தேர் புறப்பட்டதை மட்டுமே அவன் அறிந்தான். தேர் எப்படிச் சென்றது, எவ்வழியாகச் சென்றது என்பதையெல்லாம் அவன் அறியவில்லை. அவன் வீட்டுக்கு முன்பாகத் தேரை நிறுத்தி, ‘இறங்குங்கள்’ என்று தேர்ப்பாகன் கூறியதைக் கேட்டு வீரன் மருள்கிறான்! 

அவனை நோக்கி, ‘‘தேர்ப்பாகனே! தேரில் ஏறியதை மட்டுமே நான் அறிந்தேன். இப்போது என் இல்லத்தருகே தேரை நிறுத்திவிட்டு ‘இறங்குக’ என்கிறாயே! தேரில், வானில் இயங்கும் காற்றைப் பூட்டினாயோ? அல்லது என் மனைவியைக் காண ஆவல் பூண்டிருந்ததைப் புரிந்துகொண்ட உன் மனதைத்தான் குதிரைகள் வடிவில் பூட்டினாயோ? நான் அறியேன்.   இதை எனக்குச் சொல்வாயாக! என் மனமறிந்து தேரைச் செலுத்திய பாகனே! நீ நீடூழி வாழ்வாயாக!’’ என்று அந்த வீரன் தன் தேர்ப்பாகனை மனமார வாழ்த்தி நன்றி செலுத்தும் காட்சி இப் பாடலில் காணமுடிகிறது. 

‘இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்

புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்

ஏறிய தறிந்தன் நல்லது வந்தவாறு

நனியறிந்தன்றோ இலனே தாஅய்

முயற்ப உகளும் முல்லையம் புறவிற்

கனவக்கதிர் வர்கின் சீறூர் ஆங்கண்

மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ

இழிமின் என்ற நின்மொழி மருண்டிசினே

வான் வழங்கியற்கை வளி பூட்டினையோ?

மானுருவாக நின் மனம் பூட்டினையோ?

உரைமதி வாழியோ வலவ!’ (அகம் - 384)

வீரனுக்குத் தன் மனைவியின் நினைவு வந்ததும் தன் வரவுக்காக அவள் ஏக்கத்துடன் காத்திருப்பாளே என்கிற தவிப்பும் தன் மனத்தில் அவளைக் காண்பதற்காக எழுந்த ஆவலும் சேர்ந்து உந்தித்தள்ள தேரில் ஏறுகிறான்.  

 தன் தலைவனுடைய உளப்பாங்கிற்கேற்ப தேரைச் செலுத்தும் திறமை மிக்கவன் தேர்ப்பாகன். தேரில் பூட்டிய குதிரைகளோ பாகனின் குறிப்புணர்ந்து தேரை இழுத்துக் கொண்டு விரையக் கூடிய ஆற்றல் மிக்கவை. அதனால்தான் வீரன், ‘ஏன் மனதைத் தேரில் பூட்டினாயோ?’ என்று வினவாமல் ‘உன் மனதைக் குதிரைகள் வடிவில் பூட்டினாயோ?’ என்று வினவுகிறான். 

இதய மாற்று சிகிச்சைக்காக இதயத்தைச் சுமந்துகொண்டு அவசர ஊர்தியில் விரைவதைப் பார்த்திருக்கின்றோம். இந்த அகப்பாடலில் ஒருவரின் இதயத்துடிப்பை அடுத்தவர் ஏந்திக்கொண்டு பறந்து சென்று இலக்கினை அடைந்த காட்சியைக் கண்டு வியக்கிறோம்!  

இரா.மலர்விழி


Add new comment

Or log in with...