இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளான இலங்கையர் அடையாளம்

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றுக்கு உள்ளான இலங்கையர் அடையாளம்-Sri Lankan Tourist Guide Infected Corona

- 52 வயதான சுற்றுலா வழிகாட்டிக்கு கொரோனா தொற்று
- கொரோனா பரவலை தடுக்க உதவுமாறு அரசு வேண்டுகோள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

52 வயது சுற்றுலா வழிகாட்டியான இவர், தற்போது அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (10) பிற்பகல் இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் வாசிக்க தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா குழுவினருக்கு சுற்றுலா வழிகாட்டல் சேவையை வழங்கியுள்ள நிலையில் இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் வாசிக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலா குழுவினர் சென்ற இடங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்ட நபர்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மிக விரிவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வகையில் நேற்று முதல், தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே வெளிநாடுகளில் இருந்து வருவோர் மற்றும் பொதுமக்கள், இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...