தவக்காலம்; ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

சாம்பல் புதனில் தொடங்கும் தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ‘ஈஸ்டர்’ தினத்தின் முதல்நாள் வரை கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது.

தவக்காலத்தை ஆங்கிலத்தில் ‘லெண்ட் டேஸ்’(Lenten Days) என்று அழைக்கிறோம். Lenten என்ற வார்த்தை வழக்கொழிந்த ஆங்கிலச் சொல்லில் இருந்து பிறந்த ஒன்று. அதாவது, வசந்தம் வருகிறது என்பதைச் சொல்லப் பயன்படுத்தப்பட்டது.

தவக்காலம் என்றாலே ஒரு வேளை மட்டும் உண்பது, இரு வேளை பட்டினி கிடப்பது, மாமிசம் உண்ணாமலும் மது அருந்தாமலும், இன்ன பிற கேளிக்கைகளில் ஈடுபடாமலும் இருப்பது; பிறகு தவக்காலம் முடிந்ததும் எல்லாத் தீய செயல்களையும் ஆரம்பித்துவிடலாம் என்ற அறியாமை பலரிடம் இருக்கிறது.

தவக்காலத்தை இப்படி அணுகுவது சரியா? வேறு எப்படி அணுகுவது என்று கேட்பவர்களுக்கு அதை ஒரு வசந்த காலத்தின் வாசலாக எண்ணிப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

தவக்காலம் வசந்தத்தைக் கொண்டுவரும் புதியதொரு ஆரம்பம் என்ற பொருளில் அணுகுவதையே நம் ஆண்டவர் விரும்புகிறார். வசந்தம் வருவதற்கு முன் வலியும் இழப்புகளுக்கும் மிக்கக் கடினமான நாட்களை நாம் கடந்து வர வேண்டும்.

கொளுத்தும் கோடையும், அதன்பின் வாட்டும் குளிரும், குளிரைத் தொடர்ந்து வெறுமையை உணர்த்தும் இலையுதிர் காலமும் வந்தபிறகே, புத்தம் புதுத் துளிர்கள் தென்றலில் சிலுசிலுக்க வசந்தம் தன் வருகையை உறுதி செய்கிறது. வசந்தம் தன் நாட்களில் சிறந்த செழுமையையும் விளைச்சலையும் நமக்குத் தருகிறது.

செழுமையும் நல்ல விளைச்சலும் தேவையெனில் மரங்கள் இலைகளை உதிர்த்ததுபோல மனிதர்களாகிய நாமும் தீமைகளையும் கெட்ட பழக்க வழக்கங்களையும் உதறி விட்டுப் புதிய மனிதர்களாய் மனமாற்றம் பெறத் தவக்காலம் அரிய வாய்ப்பாக மாறிவிடுகிறது.

இயேசுவின் வழியில் பயணம்:

மனமாற்றம் என்பது ஒரு பயணம்; இருளிலிருந்து ஒளியை நோக்கி, பாவத்திலிருந்து புனிதத்தை நோக்கி, சாவிலிருந்து வாழ்வை நோக்கி, வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி, இயேசுவின் பாதையில் நடைபோடும் புனித பயணம்.

இயேசு தன்னுடைய பொது வாழ்வைத் தொடங்குவதற்கு முன் பாலைநிலத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவும் உண்ணா நோன்பிருந்தார் என்று விலிலியம் சான்று பகர்கிறது. நாற்பது நாட்களின் முடிவில் அவர் பசியுற்றிருக்கும்போது சாத்தான் அவரை அணுகி, “நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்களை அப்பம் ஆகும்படி கட்டளையிடும்” என்றான்.

அதற்கு இயேசு மறுமொழியாக, ‘‘மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று கடவுள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும் உயிர் வாழ்கிறான் என்று எழுதியிருக்கிறதே” என்று கூறி அதைத் துரத்தியடித்தார்.

தன் தவமுயற்சியில் தீய செயல்களின் அதிபதியாகிய சாத்தானின் சோதனைகளை வென்று காட்டினார் இயேசு.

தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருப்பதன் பின்னணியில் இயேசு வாழ்ந்து காட்டிய இந்த தவ வாழ்வே வாழிகாட்டுகிறது.

 தவக்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும்? அதை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாதவர்கள் இருக்கலாம். முதலில் தவக்காலத்தை உங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக எண்ணுங்கள். நான் நோன்பு இருக்கிறேன் என்று என்னைச் சுற்றியுள்ளவர் அனைவருக்கும் அறிக்கையிட வேண்டும் என்பதில்லை.

விவிலிய ஆராய்ச்சியாளர்கள் இயேசுவின் காலத்திலிருந்த எருசலேம் வாழ்க்கையிலிருந்து ஒரு சுவையான தகவலைத் தருகிறார்கள்: யூதர்களில் ஒரு பிரிவனராகிய பரிசேயர்கள் வாரத்தில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது நாட்களில்தான் நோன்பிருப்பார்களாம். ஏனென்றால் மோசே இறைவன் அளித்த கட்டளைகளைப் பெற சீனாய் மலைமேல் வாரத்தின் ஐந்தாம் நாள் ஏறிச் சென்று அடுத்து வந்த வாரத்தின் இரண்டாம் நாள் திரும்பி வந்தார்.

அதன் நினைவாகவே தாங்கள் இவ்வாறு நோன்பிருக்கிறோம் என்பார்களாம்! ஆனால் ஆராய்ச்சியாளர்களின் முடிவின்படி எருசலேமில் வாரத்தின் இரண்டாம் மற்றும் ஐந்தாம் நாட்களில் சந்தை கூடுவது வழக்கம். அந்நாட்களில் எருசலேம் நகரைச் சுற்றியிருந்த ஊர்களிலிருந்து நகருக்குப் பெருந்திரளான மக்கள் வந்து கூடுவர்.அவர்கள் தங்களைப் பக்திமான்கள் என்று எண்ண வேண்டும் என்பதற்காகவே பரிசேயர்கள் தங்களுடைய தலைமுடியை  சீர் செய்யாமல், சோர்ந்த முகத்துடன் அலைந்து தாங்கள் நோன்பிருப்பதை வெற்றுப் பெருமைக்காக எல்லோருக்கும் காட்டிக் கொள்வார்களாம்.

இன்று நம்மில் பலரும் கூட பரிசேயர்களைப் போன்ற வெற்றுப் பெருமையில் தவக்காலத்தின் புனிதத்தைக் குலைத்துவிடுறோம். ஆனால் இச்செயலை இயேசு அன்று கண்டித்தார். அது பரிசேயர்களைக் கோபமூட்டியது. அன்று அவர்களது வெளிவேடத்தை அவர் சுட்டிக்காட்டியது இன்று நமக்கும் பொருந்துகிறது.

“நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளி வேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டுத் தங்கள் முகத்தை விகாரப்படுத்திக்கொள்கின்றனர். நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவி; முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.

அப்போது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல் மறைவாயுள்ள பரலோகத் தந்தைக்கு மட்டும் தெரியும். அவரும் உங்களுக்குப் பிரதிபலன் அளிப்பார்”(மத்தேயு:6:16) என்றார்.

உண்ணா நோன்பு மூலம் நம்மை நாமே வருத்திக்கொள்ளுதல் என்பது நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதாக அமைய வேண்டும்.இவற்றோடு இயேசுவின் கல்வாரிப் பாடுகளை தியானம் செய்வதும் அதற்குத் திருப்பலியிலும் தவக்கால ஜெபக்கூட்டங்களில் பங்கேற்பதும் முக்கியமான பக்தி முயற்சிகள் என்பதை மறக்கக் கூடாது. தீய பழக்க வழங்களை முற்றாகத் துறத்தல், அவற்றுக்குச் செலவு செய்துவந்த தொகையை ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், துன்ப, துயரத்தில் இருப்போரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தல்,

ஈட்டும் ஊதியத்தில் ஒரு பகுதியை இறை பணிக்குக் கொடுத்தல், நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லுதல், இயலாதவர்களுக்கு சிறு உதவிகளையேனும்  செய்தல், ஆணவத்தைத் துறந்து தாழ்ச்சியோடு இருத்தல் போன்றவை எம்மை இயேசுவின் உண்மை சீடராக்கும்.                         

அருட்தந்தை அருண் ரெக்ஸ்

 


Add new comment

Or log in with...