முறையான தேசிய கல்வி கொள்கை உடனடியாக உருவாக்குவது அவசியம்

அமைச்சர்களின் படங்கள்,

செய்திகள் பாட

புத்தகத்திலிருந்து நீக்கம்

 

தரம் 06 இலிருந்து

சகலருக்கும் கணனிக் கல்வி

 

குறைந்த மாணவர்

கொண்ட பாடசாலைகள்

ஒன்றிணைப்பு

 

19 கல்வியியற் கல்லூரிகள்

பல்கலை பீடங்களாக

தரம் உயர்வு

கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கம் மாறும்போது மாற்றம் அடையாத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையாக அமைய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கல்விக் கொள்கை” உருவாக்கும்போது துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளோடு சர்வதேச முறைமைகளை கவனத்திற்கொண்டு அது உருவாக்கப்படல் வேண்டும். அரசியல்வாதிகளின் செய்திகள், புகைப்படங்களை பாடசாலை பாடப் புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு கல்வி அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஜனாதிபதி பாராட்டினார்.

“நெனச” கணனி தொழிநுட்ப வேலைத்திட்டம் கடந்த காலங்களில் பின்னடைவைக் கண்டது. அதை புதுப்பித்து வினைத்திறனான வகையில் முன்கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பத்து, பதினொராம் தரங்களில் கணனி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சில பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதன் உயர் பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் குறைந்தது 06ஆம் தரத்திலிருந்து கணனி தொழிநுட்ப அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

கிராமிய பிரதேசங்களில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கான தீர்வாக கணனி தொழிநுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். முறையான திட்டமிடல் மூலம் நகரங்களில் பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய அறிவை கிராமிய பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும். இதற்காக கிராமிய பாடசாலைகளுக்கு அவசியமான தொழிநுட்ப உபகரணங்கள், அதிவேக இணைய வசதிகளை அரச மற்றும் தனியார் தொடர்பாடல் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குவதற்கான வாய்ப்புக்களைப் பற்றியும் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தினார்.

முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை மாற்றியமைத்து உலகை வெற்றி கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கேற்றதுமான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

 


Add new comment

Or log in with...