காற்றின் பிரதி -கேண்டீட் | தினகரன்


காற்றின் பிரதி -கேண்டீட்

ஒரு படைப்பாளனின் மிக நேர்த்தியான பண்புகள் யாதெனில் மனதின் உணர்வுகளில் இருந்து எழக்கூடிய படைப்புக்களை எழுத்தில் கொண்டு வருவதாகும். எழுத்துக்கள் என்பது எவ்வகையான நிலைப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதினை எவராலும் வரையறுக்க முடியாது. இன்று உலக வடிவமைப்பின் கூறுகள் பற்றிய அனைத்து விடயங்களினையும் எழுத்துக்கள் பேச முற்படுகின்றன, வரலாற்றின் மீது காத்திரமான முன்வைப்புக்களை செய்கின்றன, விசித்திரமான மனிதர்கள், விந்தைகள் கலந்த பூமி பற்றியெல்லாம் பேசுகின்ற எழுத்துக்கள் மிக அரிதாயினும் அவை பற்றிய தேடல்கள் எழுத்தின் வடிவமாக அல்லாமல் காட்சியியல் ரீதியாக எம்மிடம் வந்து சேர்ந்திருப்பதினை நாம் அவதானிக்கலாம். இதுவே ஒரு படைப்பின் பேசு பொருளினை விரிவாக்குகிறது எனலாம். ஒரு நாவலில் கதை சொல்லப்பட்டிருக்கும் விதமானது வழமையான கதை சொல்லலாக இருந்தாலும் அதனை புதுமையான முறையில் சொல்கின்ற போது அது வாசகனை வெகு விரைவில் சென்றடைந்து பேசு பொருளினை உருவாக்குகிறது.

ஒரு நாவலின் காட்சியமைப்பானது வழமையான காட்சியமைப்பாக அல்லாமல் வாசகனிடம் புதிய பரிணாமத்துடன் சென்றடைகின்ற காட்சியமைப்பாக இருக்குமானால் அப்படைப்பு காத்திரமான பேசு பொருளினை உருவாக்கும் என்பதினை நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வாறாக ஒன்றுக்கொன்றிலிருந்து மாறுபடும் படைப்புக்களே வெற்றியின் பக்கம் செல்லும். வழமையான போக்கிலிருந்து மாறுபடாமல் உருவாக்கப்படும் படைப்புகள் தோல்வியினை சந்திக்க நேரிடும் என்பது எழுத்துலகம் எமக்குத் கற்றுத் தரும் பாடமாகும்.

எப்பொழுதும் எழுத்துக்கள் புதுமைகளைப் பற்றி பேசுகின்ற போது பழமைகளை எங்கள் ஞாபகத்திற்கு தூவிவிட்டுச் செல்கின்றன. பழமையான நினைவுகள் மனதின் ஆழ்ந்த நிலைக்கு மனித மனங்களை நகர்த்திச் செல்லும் என்பதை நாம் அறிவோம். ஒரு வரலாற்று நாவலுக்குள் ஊசலாடுகின்ற பண்பும் அதுதான். மனித வாழ்வின் மீதமாய்ப் போன எச்சங்களை எழுத்துக்களின் ஊடாக ஒன்றுபடுத்தி ஞாபகங்களை மீட்டிக் கொள்வதற்கான காரணிகளைச் செய்கின்றன. எம்மைக் கடந்து சென்ற நினைவுகளை மீட்டுதல் என்பது சுகமான ஒன்று, அந்நினைவுகளை எழுத்தில் கொண்டுவருதல் என்பது நினைவுகளின் அழியாத பொக்கிஷங்கள் என்றே கூறவேண்டும். இன்றைய இலக்கிய சூழலில் நாவல்களின் வருகை என்பது அரிதாகவே இருப்பினும் வெளிவருகின்ற சொற்பமான நாவல்கள் காத்திரமான கதையாடல்களையும், அற்புதமான பாத்திரங்களையும் கொண்டிருக்கின்றன. மனிதனின் யதார்த்த பூர்வமான வாழ்வினைப் பேசக் கூடிய படைப்புக்களாக இருக்கின்றன என்பது மன நிறைவினைத் தருகிறது எனலாம்.  

வோல்ட்டேரினால் எழுதப்பட்டு பத்ரி சேஷாத்ரியினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மனித வாழ்வியலின் தத்துவங்களில் ஏற்பட்ட துன்பியல் நிகழ்வுகளை, அப்பட்டமாக சொல்லி பெரும் கவனத்தினை ஈர்த்த படைப்பே இதுவாகும்.

ஒரு படைப்பின் அழகியல் என்பது மனித வாழ்வின் பல்வேறு அங்கங்களை பற்றி யதார்த்தமாக பேசுவது என்பதாகும். ராஜ வாழ்வினைப் பேசுகின்ற படைப்பாகட்டும் அல்லது மேல்தட்டு மக்களின் வாழ்வினைப் பேசுகின்ற படைப்பாகட்டும் அவை புனைவுகளின் பிரதிபலிப்பாக இருக்கின்ற போதுதான் எழுத்துகளுக்கு இருக்கின்ற மாய சக்தியினை எம்மால் புரிந்து கொள்ள முடியும். தத்துவங்களினதும், நாடோடி வாழ்வினதும் இருண்ட அத்தியாயமாகப் பேசப்படும் இந்நாவல் வரலாற்றுப் பக்கங்களில் இருந்து மறுதலிக்க முடியாத படைப்பாகும். உலகின் தலை சிறந்த இலக்கியப் படைப்புக்களில் ஒன்றாக கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படும் பிரெஞ் நாவலே கேண்டீட்.   


Add new comment

Or log in with...