ஆடைகளை தேர்ந்தெடுப்போம்

பெண்கள் ஆடைகளை தேர்ந்தெடுக்கும்போது தமது உயரம், எடை,வயது,உடலமைப்பு மற்றும் சருமத்தின் நிறம் ஆகியவற்றை கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம். பணம் உண்டு என்பதற்காக கண்டதையும் வாங்கி அணிவது அனைவருக்கும் பொருத்தமாக அமையாது. அதனால் தங்களுக்கு எம்மாதிரியான ஆடைகள் பொருத்தமாக இருக்குமோ அவற்றை மட்டுமே வாங்கி அணிய முன்வர வேண்டும்.

முதலில் உங்கள் உடல் உறுப்புக்களின் அளவுகள் பற்றி உங்களுக்குள் தெளிவான விளக்கமிருக்க வேண்டும். தோல்பட்டையின் அகலம், மார்பின் சுற்றளவு, இடுப்பு, கழுத்து ஆகிய அளவுகளை தெளிவாக அறிந்திருந்தால் ஆடைகளை தேர்ந்தெடுப்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

சில பெண்களுக்கு இறுக்கமாக அணிந்தால் நன்றாக இருக்கும் மேலும் சிலருக்கு இறுக்கமின்றி தளர்வாக அணிவதே பொருத்தமாகும். அதனால் உங்களுக்கு எம்மாதிரியான ஆடை பொருந்தும் என்பதை தேர்ந்தெடுங்கள். அதற்காக உங்கள் உடலிலும் பார்க்க மிகப்பெரிய ஆடையை வாங்காதீர்கள். அது உங்களை மேலும் அகலமாக காட்டுவதுடன் உங்கள் நடமாட்டம் மற்றும் அசைவுகளுக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் உடற் பருமனைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தால் உங்கள் இலக்கை அடைந்த பின்னர் அணிய வேண்டிய ஆடைகளை முன்கூட்டியே வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வாங்கும் ஆடைகள் பெரிதாகியிருப்பின் பின்னர் அதில் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

ஆடை எவ்வாறான துணியில் தைக்கப்பட்டுள்ளது. அது உங்கள் உடலுக்கு பொருந்தி வருமா என்பதை கவனத்திற் கொள்ளுங்கள். சில ஆடைகளின் நிறம் சருமத்தின் நிறத்தை குறைத்துக் காட்டும். அதனால் உங்களுக்கு பிடித்த உங்களை எப்போதும் அழகாக காட்டும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்.

இயலுமானவரை கடைகளிலேயே ஆடைகளை அணிந்து பார்த்து விடுங்கள். இதனால் மனதுக்கு பிடிக்காத ஆடைகளை வாங்க வேண்டிய தேவை ஏற்படாது. காலத்துக்கேற்ப நாகரீகத்தை பின்தொடர்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். என்றாலும் உங்களுக்கு அது பொருந்தாது என்று தெரிந்தால் உடனே அதனை விட்டுவிட தயங்காதீர்கள்.

வாங்கும் ஆடை அந்த விலைக்குரியது தானா என்பதை உறுதி செய்யும் அதேநேரம் அதனை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் கேட்டறிந்து கொள்ளுங்கள். புதிய ஆடைகளை வீட்டுக்கு வாங்கி வரும்போது அலுமாரியில் ஏற்கனவே மடித்து அடுக்கி வைத்துள்ள பழைய ஆடைகளை அப்புறப்படுத்துங்கள். விலையுயர்ந்த பயன்படுத்திய ஆடைகள் இப்போது வலைத்தளங்களில் விற்பனைக்காக விடப்படுகின்றன.நீங்களும் அவ்வாறு செய்யலாம். இல்லையேல் இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

லக்ஷ்மி


Add new comment

Or log in with...