சிரிய இராணுவ தாக்குதல்கள்: 9 சிறுவர்களுடன் 20 பேர் பலி

இத்லிப் பிராந்தியத்தில் சிரிய இராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் ஒன்பது சிறுவர்கள் உட்பட குறைந்தது 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாதிக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான இத்லிப்பை கைப்பற்றுவதற்கு அரச படை அங்கு உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பிராந்தியத்தில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் நிர்க்கதியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இத்லிப் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மேற்படி கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரமி அப்தல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இத்லிப் நகரில் பாடசாலை சிறுவர் ஒருவர் மூன்று ஆசியரியர்கள் அதேபோன்று மேலும் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு இத்லிப்பின் வடக்காக இருக்கும் மாரத் மிஸ்னில் ஆறு சிறுவர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னிஷில் இடம்பெற்ற தாக்குதல்களில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட மேலும் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...