மலேசிய அரசியல் நெருக்கடி: எம்.பிக்களுடன் மன்னர் பேச்சு

மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக அந்நாட்டு மன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களை இரண்டாவது நாளாக நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஒரு தரப்பு புதிய அரசொன்றை அமைப்பது அல்லது புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

ஐக்கிய அரசு ஒன்றை அமைக்கும் யோசனை எதிர் தரப்பினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக 94 வயதான மஹதிர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக மலேசிய அரசியலில் மிக முக்கியமானவராக கருதப்படும் மஹதிர் கடந்த திங்கட்கிழமை பதவி விலகியபோதும், முழு அதிகாரத்துடன் அவரை இடைக்காலப் பிரதமராக மன்னர் உடன் நியமித்தார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மன்னர் 222 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் பதவி வகிக்க தமக்கு விருப்பமானவரை பெயரிட அல்லது புதிய தேர்தலுக்குச் செல்வதற்காக தமது விருப்புக் குறித்து மன்னர் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதில் சிலர் மஹதிர் தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கு வெளிப்படையாக ஆதரவு வெளியிட்டுள்ளனர். எனினும் ஆட்சி அமைப்பதற்கு அவர்களிடம் போதிய பெரும்பான்மை இருப்பது குறித்து உறுதியாகவில்லை.

அதேபோன்று 72 வயதான அன்வர் இப்ராஹிம் பிரதமராக நியமிப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஆதரவு வெளியாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு அனவர் இப்ராஹிம் மற்றும் மஹதிர் மொஹமட் கூட்டணியே பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது.

அன்வர் ஆதரவு கூட்டணியினர் இரண்டடுக்கு பஸ் வண்டியில் சீர்திருத்தத்திற்கான கோசங்களுடனேயே மன்னர் மாளிகையை அடைந்தனர்.

மலேசிய அரசியலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அன்வர் மற்றும் மஹதிர் இடையிலான உறவு முக்கிய பாத்திரம் வகிக்கிறது. பகடான் ஹரபான் கூட்டணி அரசில் பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹிமுக்கு வழங்குவதற்கான கால எல்லையை நிர்ணயிப்பது குறித்து மஹதிர் மொஹமட்டுக்கு அழுத்தம் அதிகரித்ததை அடுத்தே தற்போதை அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் ஐக்கிய அரசு ஒன்றை அமைப்பது பற்றிய மஹதிர் மொஹமட்டின் ஆலோசனையை மலேசியாவை ஆறு தசாப்தங்களாக ஆட்சி புரிந்த ஐக்கிய மலே தேசிய அமைப்பு உட்பட நான்கு கட்சிகள் நிராகரித்துள்ளன.

புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு இந்த நான்கு கட்சிகளும் கோரியுள்ளன.

இதேவேளை அன்வர் இப்ராஹிமை பிரதமராக நியமிக்கும்படி அவரது ஆதரவாளர்களால் கேரப்பட்டுள்ளது. அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதிக் கட்சியில் 39 ஆசனங்கள் இருப்பதோடு அந்தக் கூட்டணியில் 62 இடங்களே இருக்கும் நிலையில் பெரும்பான்மை ஆதரவை பெறுவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

“இறைவன் நாடினால் எல்லாம் நன்றாக நடக்கும்” என்று அன்வர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...