உலகின் பல நாடுகளுக்கும் கொவிட்-19 வைரஸ் பரவல்

ஈரான், இத்தாலி, தென் கொரியாவில் தீவிரம்

புதிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்னும் உலகம் தயாராக வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் தென் கொரியாவில் வைரஸ் தொற்றிய சம்பவங்கள் 1,000 ஐ தாண்டி இருப்பதோடு ஈரானில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் பல நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக இருக்கும் சீனாவில் அதன் பாதிப்பு குறைந்து வருகின்றபோதும் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இந்த வைரஸ் வேகமாக பர ஆரம்பித்துள்ளது.

வைரஸை தடுக்கும் வகையில் பல நாடுகளிலும் நகரங்கள், சிறு நகரங்கள் வெளித் தொடர்பு இன்றி மூடப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் பதிவானதை அடுத்து கனேரிய தீவுகள் மற்றும் ஆஸ்திரியாவில் ஹோட்டல்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஈரானில் சுமார் 100 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றியிருக்கும் நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் சுகாதார பிரதி அமைச்சர் இராஜ் ஹரிரிச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உண்மையில் இன்னும் அதிகம் என்றும், ஈரான் வைரஸ் தொற்று நிலவரத்தை மூடிமறைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுபற்றி திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஹரிரிச்சி இந்தக் குச்சாட்டை மறுத்தார். எனினும் அந்த மாநாட்டில் தொன்றிய அவரது உடல் நிலை மோசமாக இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டியது நேரடி ஒளிபரப்பில் தெரிந்தது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பின் சீனாவுக்கான நிபுணரான ப்ரூஸ் அயில்வால்ட் பாராட்டி பேசினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமையகமான ஜெனிவாவில் பேசிய அவர், ஏனைய நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு “தயார் நிலையில் இல்லை’ என்றார்.

“பெரிய அளவில் கையாள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதனை விரைவாகச் செய்ய வேண்டும்” என்று அவர் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

இந்த வைரஸினால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்திருப்பதோடு 78,000க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. எனினும் கடந்த புதன்கிழமை 52 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த மூன்று வாரங்களில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பாக இது இருந்ததோடு வைரஸின் மையப் பகுதியாக இருக்கும் ஹுபெய் மாகாணத்திற்கு வெளியில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையும் 406 ஆக குறைந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதற்கான நம்பிக்கைக்குரிய சம்பிக்ஞையாக இது உள்ளது.

சீனாவுக்கு வெளியில் 40 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதோடு 2,700 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நோய்த் தொற்று தற்போது பல டஜன் நாடுகளுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலியில் வைரஸ் தொற்று தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் அதனை ஒட்டி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் முதல் முறை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்தாலியுடன் தொடர்புடையவர்களால் முதல் முறை புதிய கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவானதாக குரோஷியா, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அறிவித்திருப்பதோடு ஆபிரிக்காவில் அல்ஜீரிய நாட்டிலும் முதல் முறை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த ஒருவரிடம் இருந்து லத்தீன் அமெரிக்காவில் முதல் முறையாக பிரேசிலில் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

அண்மைய நாட்களில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறி இருக்கும் இத்தாலியில் 300க்கும் அதிகமாவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் அண்டை நாடுகள் இத்தாலிக்கான எல்லையை மூடாமல் இருக்க தீர்மானித்தன.

ஐரோப்பா எங்கும் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளபோதும் எல்லைகளை திறந்தே வைப்பதற்கு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி சுகாதார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை கூடியபோது தீர்மானித்தனர்.

எனினும் இத்தாலியின் லோம்பர்டி பிராந்தியத்தில் 10 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சிசிலி தீவில் ஒரு பெண், குரோஷியாவில் ஒரு ஆண், ஆஸ்திரியாவில் தம்பதியர் இருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் லோம்பர்டியிலிருந்து வந்தவர்களென தெரியவந்துள்ளது.

அதேபோன்று லோம்பர்டியின் எல்லையை ஒட்டியுள்ள ஸ்விட்சர்லாந்திலும் 70 வயது முதியவர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் கேனேரி தீவில் மருத்துவர் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டு, அதிலுள்ள 1000 பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இத்தாலிக்கு சென்று திரும்பி வந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொவிட்–19 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி பதிவானது. பயணக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதோடு பல முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

“உலகளாவிய தொற்று நோய் ஆபத்து ஒன்றுக்கு தயாராகும்படி” உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா சுகாதார நிறுவனம் உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளன. இதில் வறிய நாடுகளில் ஆபத்து அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தென் கொரியாவில் நேற்று புதிதாக 169 கொவிட்–19 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் அந்நாட்டில் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக உயர்ந்துள்ளது. இது சீனாவுக்கு அடுத்து அதிக வைரஸ் தொற்று சம்பவங்களாகும் இந்த வைரஸினால் தென் கொரியாவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் தென் கொரியாவின் நான்காவது பெரிய நகரான டெகு நகரிலேயே இந்த வைரஸ் தொற்றில் 90 வீதமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்து அண்டை மாகாணமான வடக்கு கியோசன் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

2.5 மில்லியன் மக்கள் வசிக்கும் டெகு நகர வீதிகள் கடந்த ஒரு சில தினங்களாக வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும் முகக் கவசம் விற்கும் கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

மக்கள் கூடுதல் அவதான செலுத்த தென் கொரிய நிர்வாகம் கோரி இருப்பதோடு காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 23 வயது சிப்பாய் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து நான்ஜிங்கை அடைந்த விமானம் ஒன்றில் இருந்த மூன்று சீன நாட்டவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் அந்த விமானத்தில் இருந்த 94 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் இந்த வைரஸின் மையப் புள்ளியாக ஈரான் மாறியுள்ளது. கொவிட்–19 வைரஸ் நோயினால் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரானில் மேலும் மூவர் உயிரிழந்தனர்.

இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வாரம் தொடக்கம் ஈரான் கடுமையாக போராடி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க பல வளைகுடா நாடுகளும் ஈரானுடனான தொடர்புகளை துண்டிக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

பாகிஸ்தான், ஈரானுடனான ஒரே ஓர் எல்லையைத் தவிர மற்ற அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.


Add new comment

Or log in with...