டெல்லி வன்முறை தீவிரமடைந்தது ஏன்?

பொலிஸார் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

டெல்லி பொலிஸ்துறைக்கு சுதந்திரம் இல்லாததுதான் பிரச்சினை என்றும் பொலிஸ்துறை சட்டத்தின் படி முழுமையாக செயல்பட்டிருந்தால் இந்த அளவிற்கு வன்முறை நடந்திருக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பொலிஸுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மக்களை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி வன்முறையில் பொலிஸ்துறையைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவித்தார். மேலும் வன்முறை தொடர்பான வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிப்பதால் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அப்போது பொலிஸாரின் மெத்தன போக்கே வன்முறை இந்த அளவிற்கு பெரிதானதற்கு காரணம் என்று கூறிய நீதிபதிகள், நிலைமையை இந்த அளவிற்கு ஏன் கைமீற விட்டீர்கள் என கேள்வி எழுப்பினர்.

‘டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது. வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும்? பொலிஸ்துறையின் தொழில்முறை இல்லாமை, அவர்களுக்கு சுதந்திரம் இல்லாததுதான் பிரச்சினை. பொலிஸ்துறை சட்டத்தின் படி முழுமையாக செயல்பட்டிருந்தால், இந்த அளவிற்கு வன்முறை நடந்திருக்காது. இங்கு தாக்கல் செய்யப்பட்ட வன்முறை தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வன்முறை தொடர்பான வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கும். ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 23-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 7 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் வரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் அம்புலன்ஸுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

வன்முறை நடந்த மத்திய மற்றும் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் மார்ச் மாதம் 24-ம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஏ.ஜே.எம்.ஐ. எனப்படும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் பழைய மாணவர் சங்கத்தினர், மற்றும் ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டியைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அப்போது டெல்லி கலவரத்தை தடுத்து நிறுத்தி அமைதியை நிலை நாட்ட நடவடிக்கை கோரியும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தினர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் டெல்லி சீலாம்பூர் சென்று உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், டில்லி குரு தேக்பகதூர் மருத்துவமனை சென்று கலவரத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து வன்முறை தணிந்துள்ளது. நேற்று காலையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெறவில்லை. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று காலை திறக்கப்பட்டன. டெல்லியில் வன்முறை கட்டுக்குள் வந்துள்ள அதேசமயம், அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் வன்முறை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.


Add new comment

Or log in with...