எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானர்

எகிப்தில் சுமார் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91 வயதில் காலமானார்.

அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளப்பட்டு ஒருசில வாரங்களில் அவர் உயிரிழந்ததாக அரச தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது. எகிப்தின் நான்காவது ஜனாதிபதியாக 1981 தொடக்கம் பதவி வகித்த ஹொஸ்னி முபாரக் அரபு வசந்த மக்கள் போராட்டத்தில் வைத்து வெளியேற்றப்பட்டார். இந்த எழுச்சிப் போராட்டத்திற்கு பின் அவர் நான்கு ஆண்டுகள் சிறை அனுபவித்த நிலையில் 2017 ஆம் ஆண்டு விடுதலை பெற்று, தன் மீதான பல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

நைல் டெல்டா பகுதியில் உள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் அவர் 1928 ஆம் ஆண்டு பிறந்தார். 1949 ஆம் ஆண்டு எகிப்து விமானப் படையில் இணைந்த முபாரக் அடுத்த ஆண்டு ஒரு விமானியாக பட்டம் பெற்றார். தனது பதவி நிலையில் உயர்வு பெற்ற அவர் 1972இல் எகிப்து விமானப்படையின் தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.

எனினும் அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல், பொலிஸ் அடக்குமுறைகள், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார பிரச்சினைகள் என்று பல சர்ச்சைகளுக்கும் முகம்கொடுத்தார்.


Add new comment

Or log in with...