கொவிட்-19: மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

உலகெங்கும் உயிரிழப்புகள் அதிகரிப்பு

உலகெங்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் 80,000ஐ தாண்டியிருக்கும் நிலையில் அதனால் மோசமாக பாதிப்புற்றிருக்கும் நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை மேலும்் அதிகரித்து 977 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டுக்கு அவசியத் தேவையின்றி பயணம் மேற்கொள்வதற்கு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளும் அதனை கட்டுப்படுத்துவதற்கு போராடி வருகின்றன. வைரஸ் தொற்று அச்சத்தால் ஜப்பான் பங்குச் சந்தை நேற்று பெரும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் மற்றும் லண்டன் வர்த்தகமும் வீழ்ச்சி கண்டுள்ளன.

அமெரிக்காவின் டோவ் குறியீடு ஈராண்டு காணாத அளவு சரிந்துள்ளது. இழப்பு நேருமோ என்ற அச்சத்தால் பலர் பங்குகளை விற்கும் வேளையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது.

ஓர் அவுன்ஸ் தங்கம் விலை சுமார் 1,689 டொலருக்கு உயர்ந்துள்ளது. நிலையற்ற பொருளாதார சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாகத் தங்கத்தை வாங்குகின்றனர். இந்நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள வர்த்தக முடக்கம், மற்ற நாடுகளிலும் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறும் ஆபத்து இருக்கும் நிலையில் உலகம் அதற்கு மேலும் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த திங்கட்கிழமை அறிவுறுத்தியது. பல நாடுகளிலும் இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இலகுவாக தொற்றும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

என்றாலும் உலகளாவிய தொற்று நோயாக இதனை இப்போதைக்கு அடையாளப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியது.

கொவிட்–19 என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் சுவாசத் தொகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இந்த வைரஸினால் அதிகம் பாதிப்புற்ற நாடாக சீனா தொடர்ந்து நீடிக்கிறது. இந்த வைரஸ் தொற்றியவர்களில் 1 தொடக்கம் 2 வீதமானவர்களே உயிரிழப்பாக கூறப்படுகின்றபோதும் இதன் இறப்பு வீதம் இன்னும் அறியப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

காட்டு விலங்குகளின் நுகர்வை தடை செய்திருக்கும் சீனா அவ்வாறான விலங்களை வேட்டையாடுவது, எடுத்துச்செல்வது மற்றும் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹுபெய் மாகாணத் தலைநகர் வூஹானில் இருக்கும் காட்டு விலக்குகளை விற்கின்ற சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கையாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மக்கள் கொங்கிரஸ் ஆண்டு மாநாட்டையும் சீனா ஒத்திவைத்துள்ளது. சீனாவின் ஆளும் கம்யூனிச கட்சியின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் இந்த அமைப்பு 1978 தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் கூடி வந்தது.

சீனாவில் கடந்த திங்கட்கிழமை புதிதாக 508 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறுக்கிழமை 409 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகி இருந்தது. வூஹான் நகரிலேயே அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சீனாவில் மேலும் 71 பேர் உயிரிழந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. 77,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்நாட்டில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

எந்த பக்க விளைவுகளும் இல்லாத நான்கு மருந்துகளுடன் வாய் வழியான மருந்தை மேம்படுத்துவதில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக சீனா அரசினால் நடத்தப்படும் கிளோபல் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

எனினும் மருத்துவ ரீதியான சோதனைகள் முன்னெடுக்கும் வரை மருந்துகளின் பாதுகாப்பு பற்றி உறுதி செய்ய முடியாதிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறான மருந்து ஒன்று புழக்கத்திற்கு வர பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹொங்கொங்கில் பாடசாலை விடுமுறை ஏப்ரல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸினால் தென் கொரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு கிறிஸ்தவ மதப் பிரிவினருக்கே வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கால் மில்லியன் மக்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லை என்ற விபரத்தை சுகாதார நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் டெகு நகருக்கு ஜனாதிபதி மூன் ஜே இன் விஜயம் மேற்கொண்டுள்ளார். வைரஸை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் குறித்த பிராந்தியத்திற்கு அதிக வசதிகளை வழங்குவதற்கும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். எனினும் முகக் கவசங்களை கெட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பானிய அரசாங்கம், புதிய கொரோனா வைரஸை கையாள உதவும் புதிய கொள்கைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க தனிநபர்களும் வர்த்தகங்களும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.

ஜப்பானில் 850 க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு, இவர்களில் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட டயமன்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த கப்பல் பயணிகளில் நான்காவது ஒருவர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பாவில் அதிக வைரஸ் தொற்று பதிவான நாடாக இத்தாலி மாறியுள்ளது. அங்கு 231 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

லொம்பார்ட் மற்றும் வெனெடோ பிராந்தியங்கள் முடக்கப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு 50,000 குடியிருப்பாளர்கள் சிறப்பு அனுமதி இன்றி வெளியேறுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக்கின் அடுத்த வாரத்தின் முக்கிய சில போட்டிகள் மூடிய அறையில் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த வைரஸினால் இத்தாலியில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

மறுபுறம் புதிய கொரோனா வைரஸினால் ஈரானில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தலைநகர் டெஹ்ரானின் சுரங்க ரயில் சேவைகள் நாளாந்தம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிரான தனிமைப்படுத்தல்கள், மருந்து ஆராய்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதியுதவி அளிப்பது என 2.5 பில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் 53 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...