வடமத்திய மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை

1600 பேருக்கு நியமனம் வழங்கினாலேயே மாணவரின் கல்விப் பாதிப்பை தடுத்து நிறுத்த முடியும்

வடமத்திய மாகாணத்தில் உள்ள கிராமியப் பாடசாலைகளில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாந்து இத்தகவலை தினகரனுக்குத் தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்தில் 816 அரச பாட சாலைகள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இம்மாகாணத்தில் தற்போது 1600 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. அவற்றில் 300 இற்கும் அதிகமானவை தமிழ்மொழி மூலமானவையாகும். ஏனைய அனைத்துமே சிங்கள மொழிமூலமானவையாகும்.

இவ்வாறு ஆசிரியர் வெற்றிடங்கள் இம்மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற போதிலும், அதனை நிவர்த்திப்பதற்கான திட்டங்களை இன்னுமே காண முடியாதிருப்பதாக அதிபர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும் கூறுகின்றனர். இவ்வருடத்திற்குள் 500 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். 400 இற்கும் அதிகமானவர்கள் இடமாற்றம் கோரியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஐந்து வருட சேவைக் காலத்தை முடித்து விட்டு சொந்த மாவட்டங்களுக்குச் செல்வதற்காக இடமாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களாவர்.

எனவே ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்குரிய எந்தவிதமான வேலைத் திட்டங்களையும் இதுவரை மாகாணசபை மேற்கொள்ளவில்லையென மாணவர்களின் பெற்றோர் கவலையுடன் கூறுகின்றனர். இதன் காரணமாக மாணவர்களது கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாகாண கல்வித்திணைக்கள அலுவலகத்திடமிருந்து உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக பெற்றோர் வேதனைப்படுகின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாயின் புதிதாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாது. இவ்வருட இறுதிக்குள் புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தை மாகாணசபை முன்னேடுக்காவிட்டால் ஆசிரியர் வெற்றிடம் மேலும் அதிகரிக்கக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

இதேவேளை 988 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அனுமதி கிடைத்ததுடன் அதற்குத் தேவையான நிதியும் திறைசேரியினால் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மாகாணசபையினால் 500 க்கு மேற்பட்டவர்களுக்கே பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதனால் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாந்து மேலும் சுட்டிக் காட்டினார்.


Add new comment

Or log in with...