ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

சம்பளங்களைக் குறைக்கும் சுற்றுநிருபங்கள் இரத்து

ஆசிரியர்களின் சம்பளத்தைக் குறைக்க கடந்த அரசுகள் கொண்டுவந்த சகல சுற்று நிருபங்களையும் இரத்துச் செய்து ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும இன்று (26) அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளார். 

ஆசிரியர்களின் சம்பளங்களை குறைக்க கடந்த அரசாங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட சகல சுற்றுநிருபங்களையும் இரத்துச் செய்து அவர்களுக்கு கௌரவமாக வாழக்கூடிய நியாயமான சம்பளத்தை வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சர் சமர்ப்பிக்க இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன கல்விச் சேவை தலைவி வசந்தா ஹந்தபான்கொட தெரிவித்தார். 

அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடு பாரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. 1994இல் இருந்த கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரன, ஆசிரியர் சேவை யாப்பிற்கமைய சிறந்த ஆசிரியர் சேவையை உருவாக்கி சிறந்த சம்பள அளவை  நிர்ணயித்து வழங்கினார்.

பின்னர் வந்த அரசுகள் இடைக்கிடையே சுற்றுநிருபங்கள் கொண்டுவந்ததால் ஆசிரியர்களின் நிலைமை கீழ்மட்டத்திற்கு வந்தது எனவும் அவர் கூறினார்.  பசில் ராஜபக்‌ஷவுடன் தமது சங்கம் அண்மையில் நடத்தியபேச்சு வார்த்தையின் பலனாக அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கி அவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டும் பொறுப்பை அவர் ஏற்றார்.

அதற்கமையவே இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். 

தமது சங்கத்தின் கோரிக்கைக்கமைய புதிய அரசின் கீழ் கல்வித்துறையில் பல வெற்றிகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சகல ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்குவது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளதாகவும் முன்பள்ளிகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார்.

இன்று அதிபர், ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டம்

இதேவேளை, ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைக் நீக்க வலியுறுத்தி  நாட்டிலுள்ள அனைத்து அதிபர்,ஆசிரியர்களும் இன்றைய தினம் புதன்கிழமை  சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகளை தீர்த்தல், அரசியல்  பழிவாங்கல்கள் போர்வையில் நியமனம் வழங்குதலை தடுத்தல், பாடசாலை  பராமரிப்புக்காக பெற்றோரிடம் இருந்து பணத்தை திரட்டுவதை நிறுத்தி மொத்த  தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்கச் செய்தல், ஆசிரியர்கள்  கற்பித்தலுக்கு அப்பால் படிவங்கள் நிரப்புதலை தடை செய்தல் போன்ற முக்கிய  கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்த போராட்டம் நடைபெற உள்ளதோடு 30 ற்கு  மேற்ப்பட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (பா)   


Add new comment

Or log in with...