புதிய கொரோனா வைரஸ் பரவலால் 'உலகளாவிய தொற்றுநோய்' அச்சம்

சீனாவுக்கு வெளியில் 30க்கும் அதிகமானோர் பலி

புதிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் தீவிரமடைந்து வரும் சூழலில் அது ஓர் உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்கும் அபாயம் பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு வெளியில் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் நாடுகள் நோய் பரவலை தடுப்பதற்கு கடுமையாக போராடி வருகின்றன.

சம காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு தொற்றுநோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போதே உலகளாவிய தொற்றுநோய் பிரகடனம் ஒன்று விடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்–19 என பெயரிடப்பட்டிருக்கும் சுவாசத் தொகுதியை தாக்கும் இந்த புதிய வைரஸுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த வைரஸினால் சீனாவில் 77,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதோடு சுமார் 2,600 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் கடந்த ஒரு சில தினங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனினும் உலகின் ஏனைய பகுதிகளில் வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதோடு உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதில் தென் கொரிய, இத்தாலி மற்றும் ஈரான் நாடுகள் இந்த வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன் மற்றும் குவைட் நாடுகளில் இந்த வைரஸ் தொற்றிய முதல் சம்பவங்கள் நேற்று பதிவாகின. ஈரானில் இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு வெளியில் பதிவான அதிக உயிரிழப்பு இதுவாகும்.

தென் கொரியாவின் தெற்கு நகரான டெகுவில் ஒரு மதப் பரிவினரிடம் கடந்த வாரம் இந்த வைரஸ் தொற்றியது தொடக்கம் நோய்த் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவில் நேற்று மேலும் 200க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதோடு மேலும் இருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு வெளியில் இதுவே அதிகமாகும்.

புதிய கொரோனா வைரஸினால் தென் கொரியாவில் எட்டுப் பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் நாட்டின் வைரஸ் அச்சுறுத்தல் நிலையை ஜனாதிபதி மூன் ஜே இன் அதிகரித்துள்ளார்.

வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடளாவிய ரீதியில் பாலர் பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் விடுமுறை நீடிக்கப்பட்டிருப்பதோடு இந்த வார இறுதியில் ஆரம்பமாகவிருந்த கால்பந்து பருவத்திற்கான போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொவிட்–19 வைரஸினால் இத்தாலியில் நேற்று நான்காவது ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஐரோப்பா முழுவதும் பரவும் அச்சம் அங்கு அதிகரித்துள்ளது.

இத்தாலியில் 150க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்றியிருக்கும் சூழலில் அந்நாட்டின் பல கால்பந்து லீக் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வடக்கு இத்தாலியின் பல டஜன் நகரங்களைச் சேர்ந்த 50,000க்கும் அதிகமான மக்களை வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதோடு இந்தக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதற்கு பொலிஸ் சோதனைச் சாவடிகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரானின் 14 மாகாணங்களில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கலாசார மையங்களை மூடுவதற்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை ஈரானில் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் அண்டை நாடுகள் ஈரானுக்கான எல்லையை மூடியுள்ளன.

இதன்படி சீனாவுக்கு வெளியில் சுமார் 30 நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வாயில் குறுகலாகி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் அன்ட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார்.


Add new comment

Or log in with...