இந்தியா மீது அமெரிக்காவுக்கு என்றுமே காதல் | தினகரன்


இந்தியா மீது அமெரிக்காவுக்கு என்றுமே காதல்

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிரமாகப் பாடுபடுகின்றன

ட்ரம்ப், மனைவி இந்தியா வருகை

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன என்று இந்தியாவுக்கு நேற்று வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இந்திய வருகை களைகட்டி இருக்கிறது. ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதல் இந்திய அரசு முறைப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வந்திருக்கும் ட்ரம்ப் நேற்று குஜராத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார். அகமதாபாத்தில், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் கூடியுள்ள மொதேரா அரங்க மேடையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் மக்கள் முன்னிலையில் பேசினார்கள்.

ட்ரம்ப் தனது பேச்சில் "கலாசாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் சம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு. வேறுபாடுகளைக் களைந்து அனைத்து மதத்தினரும் இந்தியாவில் ஒற்றுமையாக, உலகிற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி.

இந்தியாவும் அமெரிக்காவும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் தீவிரமாக செயல்படுகின்றன. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாங்கள் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம்.இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக உலகம் முழுக்க அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. எங்களது தேசத்தின் எல்லைகள் தீவிரவாதிகளுக்கு எப்போதும் மூடப்பட்டதாகவே இருக்கும்.

ஆசியாவில் இந்தியாவும் தீவிரமாக தீவிரவாதத்தை எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானை இந்தியா எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் இந்தியா முக்கியமான முயற்சிகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இப்போதுதான் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு நடக்கும் மாற்றங்களுக்கு இந்தியாவின் தீவிர முயற்சிதான் காரணம்.

நாங்களும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்கி இருக்கிறோம். ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு பக்தாத் அல் பக்தாதியை நாங்கள் 'என்கவுண்டர்' செய்தோம். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு உதவுவோம்.

உலகின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் சில இராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும்"என்று குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...