அபிவிருத்தி இலக்குகளில் புதிய அரசு பயணிக்கும் | தினகரன்


அபிவிருத்தி இலக்குகளில் புதிய அரசு பயணிக்கும்

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அபிவிருத்திகளை இலக்காகக் கொண்ட புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் தாயாராக வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை விஸ்தரிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை, நேற்று முன்தினம் திறந்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். சுமார் 56 கிலோமீற்றர் தூரம் வரையான இப்பாதை திறப்பு விழாவில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ,

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, பிரசன்ன  ரணதுங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசஅதிகாரிகளுடன் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்தம் உரையாற்றிய  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது:

எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாபதியின் கரங்களுக்கு வருகிறது. எனவே பொதுத்தேர்தலுக்குச் செல்வதற்கு நாம் தயாராகிவிட்டோம்.

மன்னார் மடுதேவாலயத்திற்கு பாதை நிர்மாணித்து தருமாறு, நெடுஞ்சாலை அமைச்சராக நானிருந்த காலத்தில் கோரிக்கை விடுத்தனர். இதற்கிணங்க பாதையை நிர்மாணித்துக் கொடுத்தோம்.இதைத்திறந்து வைப்பதற்கு வருமாறு மன்னார் ஆயர் எனக்கு அழைப்புவிடுத்தார்.

அக்காலத்தில் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திற்கும் சுதந்திரமாக செல்லமுடியாத நிலையே காணப்பட்டது. யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் இப்பிரதேசத்திற்குச் செல்வதற்கு புலிகளிடம் அனுமதி கோரி கடிதம் ஒன்றைத்தருமாறு என்னிடம் கோரினர்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நான், பிறகு ஒருதினத்தில் திறந்து வைக்க வருவதாகக் கூறினேன்.  அன்றைய தினமே யுத்தத்தை முடிக்க வேண்டுமெனவும் தீர்மானித்துவிட்டேன்.

ஜனாதிபதியானதும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். அன்றிலிருந்து நாடு பூராவும் பாதைகளை நிர்மாணித்தது மாத்திரமன்றி  சுதந்திரமாக பயணிப்பதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். பாதுகாப்பு ஸ்திரமடைந்ததும்

அபிவிருத்திகளை நோக்கிய எமது இலக்குகள் வெற்றிகளைத் தொட்டு வருகின்றன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை முதல் கட்டமாக கொழும்பிலிருந்து காலிவரை ஆரம்பிக்கப்பட்டது. பாதுகாப்பு, அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளுக்கான எமது இலக்குகள் வெற்றியடைவது குறித்து மக்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் இப்பாதையை விமர்சித்தோரும் இதை அகற்ற முயன்றோரும் இன்று இப்பாதையூடாகவே சென்று வருகின்றனர்.

நாட்டிற்கு துரோகம் செய்வோர் இன்னும் உள்ளனர்.  வசதி படைத்தவர்கள் மாத்திரமன்றி சகல தரப்பினரும் இந்த நெடுஞ்சாலையால் நன்மையடைகின்றனர்.

ஒரு நாளைக்கு இப் பாதையை மூடினால் நாட்டின் பொருளாதாரமே சிக்கலடையும். நெடுஞ்சாலைகளூடாக மக்களின் தொடர்பாடல்கள் அதிகரித்து உறவுகள் நெருக்கமடைந்துள்ளன.

எதிர்காலத்தில் கதிர்காமத்துடனும் இப்பாதை இணைக்கப்படும். இதனால் ஊவா மக்களும் இதனோடு இணைக்கப்படுவர். இதனால் மக்கள் பயனடைவர். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியேற்றதும் மத்தலை விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தினர். விவசாயிகளையும் அரிசியையும் நெல்லையும் மாத்தரமன்றி எமது கலாசாரத்தையும் கடந்த ஆட்சியாளர்கள் கேவலப்படுத்தினர். துறைமுகத்தையும் சீனாவிற்கு விற்பனை செய்தனர்.

இவர்களுக்கு இந்த தெற்குடனுள்ள  குரோதம் என்ன.

மத்தலை விமான நிலையத்தின் பயனை இன்று முழு நாடும் உணர்ந்துள்ளது. கொரோனா வைரஸைத் தொடர்ந்து சீனாவிலிருந்த எமது மாணவர்கள் இந்த விமானநிலையத்தினூடாகவே நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டைகுறூப் நிருபர்


Add new comment

Or log in with...