மர்ஹூம் சஹாப்தீன் விட்டுச்சென்ற சமூகப்பணிகள் தொடரப்பட வேண்டும்

தேசமான்ய கலாநிதி சஹாப்தீன்  கல்வித் துறையிலும் அரசியல் நிர்வாகத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தம் வரலாற்றில் தடம் பதித்துச் சென்றவர். இவர் இத்துறைகளில் ஆற்றிய பணிகள் ஏராளம். இவர் மறைந்தாலும் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவராவர். அதேவேளையில் அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் தொடர்ந்து அவருடைய பணிகளை பிள்ளைகள் செய்து வருவது வரவேற்கத்தக்க அம்சமாகும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார். 

தேசமான்ய கலாநிதி ஏ. எம். எம். சஹாப்தீனின் மூன்றாவது ஞாபகார்த்த நிகழ்வு நாரம்மல பஹமுனையில் அமைந்துள்ள சஹாப்தீன் அநாதைகள் பராமரிப்பு கற்கை நிலைய மண்டபத்தில்  அறக்கட்டளையின் தவிசாளர் ரிஸ்வான் சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது,   

மறைந்த சஹாப்தீன் என்ற நிறுவனத்தின் மூலமாக அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்தல், வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக உதவுதல், பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி உதவிகள் என இன, மத, மொழி வேறுபாடுகளின்றி மனிதாபிமான உதவிகள் செய்தவர். இந்தச் சேவையின் மூலம் அவர் இம்மையிலும் மறுமையிலும் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை.  

அவர் சிவில் சேவை அதிகாரியாக , ஜனாதிபதி ஆணைக்குழுவின் பலவற்றின் தலைவராக, அரசாங்க உயர் பதவிகளில் பல நிறுவனங்களில் சேவையாற்றியவர். இவற்றுக்கப்பால் சமூக சேவையின் பால் பற்றுறுதி கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர் ஆவார்.  

நாம் எத்தனையோ பணக்காரர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் அந்தப் பணத்தின் மூலம் சமூகத்துக்கு நல்ல காரியங்கள் எவையேனும் செய்ய வில்லையெனில் அந்தப் பணத்தில் எந்தவொரு நன்மையும் இல்லை. தம் பெயரை வாழ்நாள் பூராகவும் பேசப்படுமளவுக்கு தம் பணத்தை செலவு செய்து சேவையாற்றியவர்கள் இருப்பார்களாயின் அது மிவும் விரல் விட்டு எண்ணக் கூடிய குறைந்த தொகையினரே உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

(மாவத்தகம நிருபர்)    


Add new comment

Or log in with...