ஹக்கீமின் கருத்தை ஜே.வி.பி நிராகரிப்பு | தினகரன்


ஹக்கீமின் கருத்தை ஜே.வி.பி நிராகரிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லையென ஜே.வி.பி அறிவித்துள்ளது.  

பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஊடாகவே ஜே.வி.பி. போட்டியிடும் என்றும் அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி உட்பட சிவில் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு பரந்துபட்ட கூட்டணியை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும்  கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.  

ரவூப் ஹக்கீமின் இக்கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றையும் ஜே.வி.பி. வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;  

மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரிசீலித்து வருகின்றது.

இதற்கான பேச்சும் நடத்தப்பட்டு வருவதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த தகவலில் எவ்வித உண்மையும் கிடையாது. அது ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்தாகும்.

கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் எவ்வித பேச்சுக்களையும் ஜே.வி.பி. நடத்தவில்லை.

அக்கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நோக்கமும் தமது கட்சிக்கு இல்லை.

தேசிய மக்கள் சக்தியின் கீழ்தான் பொதுத்தேர்தலில் ஜே.வி.பி.போட்டியிடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...