பாராளுமன்றம் - பல்கலை மானிய ஆணைக்குழு இடையில் ஒப்பந்தம்

பாராளுமன்றம் - பல்கலை மானிய ஆணைக்குழு இடையில் ஒப்பந்தம்-MOU Between Sri Lanka Parliament and UGC

பல மில்லியன் ரூபா செலவில் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளும் ஆய்வுகள் பாராளுமன்றத்துடன் பகிரப்படும்

ஆய்வு மற்றும் தகவல்களைத் திரட்டுவது தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இந்நிகழ்வு இன்று (24) நடைபெற்றது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

பாராளுமன்றம் - பல்கலை மானிய ஆணைக்குழு இடையில் ஒப்பந்தம்-MOU Between Sri Lanka Parliament and UGC

கடந்த பத்து வருடங்களில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வு முடிவுகளை பாராளுமன்றத்தின் ஊடாக அணுகுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருதடவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல அரச பல்கலைக்கழகங்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆய்வு முடிவுகளை பாராளுமன்றத்துக்கு வழங்குவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான ஆய்வுகளை பாராளுமன்ற ஆய்வுப் பிரிவின் ஊடாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

அது மாத்திரமன்றி குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தகவல்கள் தேவைப்படுமாயின், பாராளுமன்ற ஆய்வுப் பிரிவின் ஊடாக சம்பந்தப்பட்ட துறைசார் பேராசிரியர்களைத் தொடர்புகொண்டு தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறானதொரு முயற்சியைச் செய்யக் கிடைத்திருப்பது பெருமைக்குரியது எனக் குறிப்பிட்டார்.

தகவலறியும் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தமை, கோப், கோபா உள்ளிட்ட குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் ஊடாக வீண் விரயங்கள் மற்றும் மோசடிகளைக் குறைக்க முடிந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். ஆய்வுகளைப் பெற்றுக்கொள்வதற்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பொதுமக்களின் பிரதிநிதிகள் சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், பல மில்லியன் ரூபாய்களைச் செலவு செய்யாது அரசாங்க பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பாராளுமன்றத்துடன் பகிர்ந்துகொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், இந்த ஆய்வுகள் மற்றும் தரவுகள் கொள்கை தயாரிப்புக்களுக்கு உதவுவதாக அமையும் என்றும் கூறினார்.

பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு நாளாக இந்நாள் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, நாட்டின் முன்னேற்றத்துக்கு மக்களின் பிரதிநிதிகள் இந்த ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறினார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யூஎஸ்எயிட் மற்றும் எஸ்டிகப் ஆகிய நிறுவனங்களுக்கும் அவர் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் பிரதி செயலாளர் நாயகமும், பதவியணி தலைமையதிபதியுமான நீல் இத்தவெல, உதவி செயலாளர் நாயகங்களான குஷானி ரோஹன தீர, ரிக்கிரி ஜயதிலக உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...