இளையராஜாவை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பஞ்சு அருணாசலம் | தினகரன்


இளையராஜாவை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பஞ்சு அருணாசலம்

கலர் படங்கள் பெருமளவு தலைதூக்கி, அதில் வெகுஜனங்கள் நாட்டம் கொண்டிருந்த நேரம் அது. அப்போது சாதாரண கறுப்பு- வெள்ளையில் அன்னக்கிளி 1976-ல் வெளியாகி அனைத்து தரப்பினரையும் பேச வைத்ததற்கு முக்கிய காரணகர்த்தா இசைஞானி இளையராஜாதான். முதல் படத்திலேயே காட்டாற்று வெள்ளம்போல் தெறித்துக் கொண்டு வந்து, மக்களின் நாடி நரம்புகளில் கலந்துவிட்டார் இளையராஜா.  

இசையமைப்பாளராக அறிமுகமான உடனேயே சமகால இசையமைப்பாளர்களான குமார், வேதா, ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி எவராலும் தொட முடியாத உயரத்தில் போய் சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டார் இளையராஜா. அதற்கு காரணம், இசைக்கருவிகளை அவர் கையாளும் முறையும், இசை ஆளுமையையும், தன் அண்ணன் பாவலரின் பாடல்களை கேட்ட கேள்விஞானத்தால் பெற்ற இசை ஞானமும்தான்!  

இந்த பாராட்டுக்கள் எல்லாம் மறைந்த தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலத்துக்குதான் போய் சேர வேண்டும். அதுதான் நியாயமும், தர்மமும் கூட. இளையராஜாவின் திறமையை கண்டறிந்து அதனை தக்க சமயத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலத்துக்குத்தான் உரியது.

இளையராஜாவை அறிமுகப்படுத்தக் கூடாது என்று பலதரப்பட்ட எதிர்ப்புகள் பஞ்சு அருணாசலத்துக்கு வந்து சேர்ந்தன.

"புது பையன் நமக்கு தேவையில்லை, ஆளைப்பார்த்தால் ஒழுங்கா மியூசிக் போடற ஆளா தெரியலயே, எதுக்கு புதுமுயற்சியில இறங்கிட்டு, வேற ஆளை பாக்கலாம்" என்று எதிர்ப்புகளை கணைகள் பஞ்சு அருணாசலத்தை துளைத்தெடுத்தன.

ஒருகட்டத்தில் அவரே, மனதை மாற்றக்கூடிய நிலைக்கும் தள்ளப்பட்டார். கடைசியில், 'திறமையில் நம்பிக்கை' என்ற ஒன்றினில் உறுதியாக இருந்து, எதிர்ப்புகளுக்கு மத்தியில் இசையமைப்பாளராக இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் பஞ்சு  அருணாசலம். அதற்கான நன்றியை அவருக்கு பல தருணங்களில் இளையராஜா      நா தழுதழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார்.  


Add new comment

Or log in with...