நபி (ஸல்) அவர்கள் மீது நேசம் வைத்தல் | தினகரன்


நபி (ஸல்) அவர்கள் மீது நேசம் வைத்தல்

“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்” (33:6) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!” 

ஒரு முஸ்லிம் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. 

ஒருவரை நேசிப்பதாக இருந்தால் அவர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். அப்போது தான் அவர் மீது அன்பு இருப்பதாக அர்த்தம். ஒரு உதாரணத்துக்கு மனைவி சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு, அவள் விருப்பப்படி நடந்தால் என் கணவர் என் மீது அன்பாக இருக்கிறார்; என்னை மிகவும் நேசிக்கிறார்; என்று சொல்லுவாள். பெற்றோர்களும் அவ்வாறுதான். அவர்களுடைய சொல்லை கேட்டு அவர்கள் விருப்பப்படி நடந்தால் ‘என் மகன் என் மீது அன்பாக இருக்கிறான்’ என்று சொல்லுவர்கள், யாராக இருந்தாலும் சரி, ஒருவரை நேசிப்பதாக இருந்தால், அந்த நேசிப்பு உண்மைதான் என்றால் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்க வேண்டும். அப்போது தான் அவர் மீது உண்மையான பாசம் இருப்பதாக அர்த்தம். இதைதான் அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்; இன்னும், உங்களுடைய பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31) 

ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் அவர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்றால் ஏன் நபி (ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டும்? ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ் கூறியதை அப்படியே தன் வாழ்வில் எடுத்து அல்லாஹ் விருப்பப்படி வாழ்ந்தார்கள், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றினால் அல்லாஹ் விருப்பப்படி நடக்கிறோம் என்று பொருள்.  நபி (ஸல்) அவர்களை எவர் பின்பற்றுகிறாரோ அவரை அல்லாஹ்வும் நேசிப்பான்; அவரது பாவங்களை மன்னிப்பான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

எம்.எம்.எம். ஸப்வான்
சீனன்கோட்டை


Add new comment

Or log in with...