மனித சமூகத்தின் மீது அல்லாஹ்வின் கருணை

சர்வ வல்லமை படைத்த அல்லாஹுத்தஆலா தன் படைப்புக்களில் ஒன்றான மனிதன் மீது அளவுகடந்த அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான். இதனை அவன் தன் அருள்மறையில்

‘நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்’  (அல் குர்அன் 16:07)  

இது முற்றிலும் உண்மையான விடயமாகும்.  

களிமண்ணைக் கொண்டு படைத்துள்ள மனிதனுக்கு அல்லாஹ், தன் ரூஹிலிருந்து உயிர் கொடுத்தான். அவனுக்கு பகுத்தறிவையும் தெரிவு சுதந்திரத்தையும் வழங்கி, அவனை பூமிக்கான பிரதிநிதியாகவும் நியமித்திருக்கின்றான். அத்தோடு மனிதனின் உயிர்வாழ்வுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அவன், இம்மையிலும் மறுமையிலும் மனிதன் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதற்காக, அதற்கு தேவையான இறை நேர்வழிகாட்டலையும் வகுத்தளித்திருக்கின்றான்.  

இவற்றோடு நின்று விடாது வானவர்களோடும் தன் படைப்புக்களுடனும் மனிதன் தொடர்பில் மெச்சிப் புகழக்கூடியவனாக இருக்கின்றான் அந்த மாபெரும் கருணையாளன் அல்லாஹ். இவ்வாறு மனிதன் தொடர்பில் உச்ச கவனம் செலுத்தியுள்ள அல்லாஹ் அவன் மீது அளவுகடந்த அன்பையும் இரக்கத்தையும் கருணையையும் கொண்டிருக்கின்றான். இதற்கு அல் குர்ஆனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் சிறந்த ஆதாரங்களாக உள்ளன.  

அந்த வகையில் மனிதன் அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் வசதி வாய்ப்புகளையும் அனுபவித்துக் கொண்டு அவனது கட்டளைகளுக்கு மாறாகவும் முரணாகவும் செயற்படுவதற்கு எதிராக படைப்பினங்கள் தினமும் குமுறுகின்றன. அவை மனிதனை அழித்துவிடவென அல்லாஹ்விடம் அனுமதியும் கோருகின்றன. ஆனால் அல்லாஹ் ‘அவர்களை விட்டுவிடுங்கள். நீங்கள் அவர்களைப் படைத்திருந்தால் அவர்கள் மீது நீங்கள் கருணை காட்டி இருப்பீர்கள். (நீங்கள் படைக்காததால் உங்களுக்கு ஏற்படவில்லை.)’ என்று குறிப்பிட்டிருப்பதாக ஹதீஸுல் குத்ஸியில் இடம்பெற்றுள்ளது.                         (ஆதாரம்: அஹ்மத்)  

இதன்படி தன் கட்டளைகளுக்கு மாறாகவும் முரணாகவும் தன் படைப்பான மனிதன் செயற்பட்ட போதிலும் கூட அதற்கு எதிராக அவனை உடனடியாக தண்டிக்க அல்லாஹ் விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது. அந்தளவுக்கு அவன் மனிதன் மீது அன்பு, கருணை, இரக்கம் காட்டக்கூடியவனாக உள்ளான். இருந்தும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இதுதான் பெரும் கவலைக்குரிய விடயமாகும்.  

ஆனால் மனிதர்களாகிய எம்மைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் அன்பும் கருணையும் தான் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். அதற்கு ஈடாக எதுமே கிடையாது. அதனால் அதுவே மனிதனின் இலக்காகவும் நோக்காகவும் இருக்க வேண்டும்.  

அதேநேரம், இந்த நபிமொழியில் ‘நீங்கள் படைக்காததால் உங்களுக்கு கருணை ஏற்படவில்லை’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அதன் ஊடாக அல்லாஹ் மனிதன் மீது கொண்டிருக்கும் அன்பும் கருணையும் மிகவும் தெளிவானது. அது வெளிப்படையானது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில்

‘மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே அவன் விட்டு வைக்க மாட்டான். எனினும் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகின்றான். அவர்களுடைய தவணை வரும் பட்சத்தில் ஒரு வினாடியும் பிந்தவும் மாட்டாது. முந்தவும் மாட்டாது.             (அல் குர்அன் 16:61)  

என்று அருள்மறையில் அவன் குறிப்பிட்டு வைத்திருக்கின்றான்.  

அல் குர்ஆனின் இவ்வசனமும் மனிதன் மீது அல்லாஹ் கொண்டிருக்கும் அன்பையும் கருணையையும் மேலும் வலுப்படுத்தி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. தன் அருள்களையும் வசதிகளையும் அனுபவித்தபடி தன்னை மறந்து, தன் கட்டளைகளுக்கு மாறு செய்த போதிலும் அதற்கு எதிராக உடனுக்குடன் மனிதனுக்கு தண்டனை வழங்குபவனல்ல அந்த மாபெரும் கருணையாளன். அதனை அவன் விரும்பவில்லை. அவன் அந்தளவுக்கு மனிதன் மீது கருணை காட்டுகின்றான். இரக்கம் கொண்டுள்ளான்.  

ஏனெனில் ‘மனிதன் பலஹீனமானவனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான். அதனால் அவன் தவறு செய்யும் இயல்புடையவனாக இருக்கின்றான். அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் தண்டித்துக் கொண்டே இருந்தால் ஒருவர் கூட தப்ப முடியாது. அதனால் தன் கட்டளைகளை மறந்தும் அவற்றை மீறியும் செயற்பட்ட போதிலும் மனிதனுக்கு அல்லாஹ் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கக்கூடியவனாக இருக்கின்றான்’ என்ற கருத்துப்பட இமாம் முஹம்மத் முதவல்லி அல் ஷாராவி (ரஹ்) அவர்கள் தன் அல் குர்அன் விரிவுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.  

அல்லாஹ் மனிதனை மண்ணால் படைத்து அவனுக்கு தன் ரூஹிலிருந்து உயிர் வழங்கி இருப்பதால் மனிதன் விண்ணும் மண்ணும் சேர்ந்த கலவையாக உள்ளான். அதனால் அவனில் விண்ணும் மண்ணும் செல்வாக்கு செலுத்தக்கூடியனவாக விளங்குகின்றன.

குறிப்பாக மனிதனில் மண்ணின் (உலக) ஆசை மிகைக்குமாயின் அவன் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் மாற்றமாகவும் முரணாகவும் நடந்து கொள்வான். அவனில் விண்ணின் ஆசை (ஆன்மீகம்) மிகைக்குமாயின் அவன் உலகோடு வெறுப்போடு நடந்து கொள்வான். ஆனால் மனிதன் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன. அதனால் மண்ணின் பக்கமோ அல்லது விண்ணின் பக்கமோ என ஒரு பக்கம் சாய்ந்து விடாது நடுநிலையாகச் செயற்பட வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு உரியதாகும்.  

அதனால் மனிதன் தன் அருள்களையும் வசதி வாய்ப்புக்களையும் அனுபவித்தும் தம் கட்டளைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் மாற்றமாக செயற்பட்டாலும் அவன் தம் தவறு பிழைகளை உணர்ந்து பாவமன்னிப்பு கோரி மீள அல்லாஹ் மனிதனுக்கு அவகாசம் வழங்கியுள்ளான். இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள், ‘ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான். ஆனால் அவர்களில் சிறந்தவர் யாரெனில் எவர் தம் தவறுக்காக தௌபா (பாவமன்னிப்பு) செய்து மீளுகின்றாரோ அவரேயாவார்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.  

(ஆதாரம்: அஹமத், திர்மிதி,

இப்னு மாஜா)  

ஆகவேதான் அல்லாஹ் மனிதன் விடும் தவறுகளுக்கு உடனடியாக தண்டனை வழங்காது ஒரு குறிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கக்கூடியவனாக இருக்கின்றான். அந்தளவுக்கு அவன் மனிதன் மீது கருணை, இரக்கம் கொண்டிருக்கின்றான்.  

மேலும் அல்லாஹ் மனிதன் மீது கொண்டிருக்கும் இரக்கம் கருணையை வெளிப்படுத்தக்கூடியதாக பின்வரும் அல் குர்ஆன் வசனமும் விளங்கிக் கொண்டிருக்கின்றது.  

‘எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதனைப் போன்று பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதேயன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்’.                  (அல் குர்ஆன் 6:160)  

இதன்படி அல்லாஹ்வுக்காக ஆற்றப்படும் ஒரு நன்மைக்காக அவன் வழங்கும் பிரதிபலன்களும் தீமைக்காக வழங்கும் பிரதிபலனும் மனிதன் மீது அல்லாஹ் கொண்டிருக்கும் இரக்கமும் கருணையும் எத்தகையது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றது.  (அடுத்த வாரம் முடிவுறும்)

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...