உரிய அனுமதியின்றி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்ய வேண்டாம்

முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை, கைது செய்ய வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பணியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை நேற்று (19) தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம். நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்ட மா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய செயற்படுவதற்கு பொலிஸ் மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்றில் தெரிவித்தார்.

இருதரப்பு விவாதங்களையும் கவனத்தில் கொண்ட நீதிமன்றம், இம்மனுவை எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்வதற்கான பிடியாணையை பெறுமாறு சட்ட மா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...