இன, மத அடையாளங்களை கொண்ட பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்

தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக்குழு பரிந்துரை
'வக்பு, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தம் அவசியம்'

இன, மத பெயர்களை கொண்ட பாடசாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும்  வக்பு சட்டம், முஸ்லிம் விவாக விவகரத்து சட்டம் என்பவற்றை திருத்த வேண்டுமெனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை நேற்று (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு இன, மத அடிப்படையிலான கட்சிகளின் பதிவை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் ஆளடையாளத்தை உறுதி செய்ய முடியாத முகமூடிகளை தடைசெய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழுவின் தலைவர் மலித் ஜயதிலக இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார். இந்தக் குழுவில் 17 உறுப்பினர்கள் உள்ளதோடு எம்.எஸ்.தௌபீக், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் முஸ்லிம்கள் சார்பில் இதில் அங்கம் வகித்துள்ளனர்.

இந்தக் குழுவின் அறிக்கையில் 13 அம்சங்கள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவையாவன,

கல்வி

கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் ஒப்பீட்டு மதக் கல்வி,கலாசார பன்மைத்துவம் பற்றிய கல்வி வழங்கப்பட வேண்டும். இன,மத மற்றும் ஏனைய சமுதாய அடையாளங்களை வெளிப்படுத்துகின்ற பெயர்களுடன் கூடிய பாடசாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்.மத்ரஸா நிறுவனங்கள் விசேட கல்வி நிறுவனங்களாக கருதி மௌலவிமார்களினூடாக பயிற்றுவிக்கப்பட வேண்டும்.16 வயது பூர்த்தி செய்யப்பட்டவர்க​ளே மத்ரஸாக்களில் சேர்க்கப்பட வேண்டும்.

முகமூடி தடை

ஆளடையாளத்தை உறுதி செய்ய முடியாத முகமூடிகளை தடைசெய்ய ​வேண்டும் எனவும் குழு பரிந்துரை செய்துள்ளது.பொது இடத்தில் முகத்தை மூடிக் கொண்டு இருக்கையில் அடையாளத்தை உறுதி செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் கட்டுப்பட மறுத்தால் கைது செய்ய அதிகாரமளிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு

புதிய பயங்கரவாதம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்த வேண்டும்.அச்சு ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த செயன்முறையொன்றையும் சட்ட திட்டங்களையும் வகுக்க வேண்டும்.பயங்கரவாத கருத்துகளுக்கு செயற்பாடுகளுக்கு ஊடகங்கள் இடமளிக்கக் கூடாது.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் விரிவாக கட்டமைப்பு ரீதியில் திருத்தப்பட வேண்டும்.மணமகள், மணமகன் இருவரதும் திருமணத்தின் போது 18 வயதை பூர்த்தி செய்திருக்க ​வேண்டும்.திருமணங்கள் பதிவு செய்யப்படுவதோடு பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறக்கூடியவாறு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.

முஸ்லிம் சிவில் சமூகத்தை வலுவூட்ட வேண்டும் எனவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தை வலுவூட்ட வேண்டும்.

வக்பு சட்டத்தை திருத்தி பள்ளிவாசல்களில் நடைபெறும் அனைத்து பிரசங்கங்களையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.முஸ்லிம் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.

இன அடிப்படையிலான மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவை இ​டைநிறுத்த வேண்டும்.இலங்கை அடையாள இலக்கத்தை கொண்ட பிறப்பு அத்தாட்சி பத்திரமொன்றை வெளியிட வேண்டும்.சகல சமயங்களையும் இணைத்து சர்வமத அலுவல்கள் அமைச்சு உருவாக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக்குழு  தலைவர் மலிக் ஜயதிலக்க எம்.பி அறிக்கையை சமர்ப்பித்து கருத்துத் தெரிவித்ததாவது,

இனங்களுக்கிடையில் நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த, புதிய வடிவிலான பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை அடியோடு ஒழித்து தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான சட்டங்களை மறுசீரமைப்பதை மையப்படுத்தி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்கள் இலங்கையை போன்று முழு உலகையும் உழுக்கியிருந்தது. இதுவரைகாலமும் எமது நாட்டின் சட்டத்தில் காணப்பட்ட குறைப்பாடுகள் காரணமாகவே இந்த குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.

இத்தாக்குதலையடுத்து நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பினராலும் கேள்வியெழுப்பப்பட்டது. மீண்டும் தேசியப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டுமென இந்த தாக்குதல் எமக்கு எடுத்துக்காட்டியது.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...