நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு பெறுவது எவ்வாறு?

கொரோனா அறிகுறிகள் பற்றிய சந்தேகம் தோன்றியதும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள்

கொரோனா வைரஸ் முதன் முதலில் 1960களில் அடையாளம் காணப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகளுக்கு அதன் தோற்றம் பற்றி இன்னும் சரியான தெளிவு இல்லை. இவ்வைரஸ்கள் கிரீடம் போன்ற வடிவத்தில் இருப்பதனால் 'கொரோனா’என்ற பெயரைப் பெறுகின்றன. இதுவரை அடையாளங் காணப்பட்ட இக் குடும்பத்தைச் சார்ந்த சில (ஏறக்குறைய 7 வகை) வைரஸ்கள் மாத்திரமே மனிதனுக்கு தொற்று ஏற்படுத்தவல்லன.

அறியப்பட்ட கொரோனா வைரஸின் வெவ்வேறு வகைகள்:

MERS (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி), SARS (கடுமையான சுவாச நோய்க்குறி) ஆகியவை அறியப்பட்ட கொரோனா வைரஸின் இரண்டு வடிவங்களாகும். அவை முறையே 2012 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் உலக சுகாதார அமையத்தினால் அடையாளம் காணப்பட்டு அவசர பிராந்திய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இறப்பு வீதங்கள் 2012 இல் MERS ஆல் 858 ஆகவும், 2003 இல் SARS 774ஆகவும் பதிவாகியுள்ளன.

வுஹான் - கொரோனா வைரஸ் (2019-nCoV):

சீனாவின் வுஹான் மாகாணத்திலுள்ள ஹுவானன் சந்தையானது கடல் உணவிற்கு மிகப் பிரபல்யமானது. இங்கு பல்வகை விலங்குகளின் மாமிசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்குதான் இந்த வைரஸ் முதன்முதலில் டிசம்பர் மாதம் 2019 இல் ஆவணப்படுத்தப்பட்டது.

பெரும்பாலான உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா சம்பந்தப்பட்ட தொற்றுகள் இந்த மாமிசச் சந்தையிலிருந்துதான் பரவி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மட்டுமல்ல,மனிதர்களுக்கிடையேயும் பரவ வல்லவை என்பதை விஞ்ஞானிகள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த வைரஸ் மேலும் வேகமாகப் பரவும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீனா இவ்வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு முன்னர் கண்டிராதவாறு இப்புதிய வைரஸினால் கடுமையான நுரையீரல் தொற்று ஏற்படும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவிற்கு சமீப காலத்தில் பயணித்த தென்கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளோரிலும் இந்நோயானது அடையாளங் காணப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸின் தொற்று கொண்ட ஒரு சீன நோயாளி ஜனவரி 26 இல் அடையாளங் காணப்பட்டார். இவர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 43 வயதான சீனப் பெண் ஒருவர் என சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

கொரோனாவைரஸின் (2019-nCoV) அறிகுறிகள் யாவை?

மூக்கு வடிதல், இருமல், தொண்டைநோ, உடல்நிலை தளர்வு, பசியின்மை, தசைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள்.

இந்த நோயின் அறிகுறிகள் சராசரியாக இரண்டு முதல் ஏழு நாட்களுக்குக்குள் தென்படலாம். அவை வரண்ட இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் என வேறுபடலாம். இவ்வறிகுறிகள் இலேசான படித்தரம் முதல் கடுமையானது வரை இருக்கும்.

சில சமயம் கடுமையான நியுமோனியா (pneumonia), சிறுநீரக செயலிழப்பு (renal failure) மற்றும் மரணத்தையும் இத்தொற்று ஏற்படுத்தவல்லது. இந்நோயின் தாக்கமானது நோயாளிகளின் தற்போதைய நோயெதிர்ப்பு சக்தியைப் (நிர்ப்பீடனத்தை) பொறுத்துள்ளது. இதுவரை இவ்வைரஸால் கொல்லப்பட்டவர்களில் பலர் ஏற்கனவே உடல் நீர்ப்பீடனம் பாதிக்கப்பட்டோராகவும் அல்லது வயதானவர்களாகவும் உள்ளனர். இவர்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்தோராவர்.

வைரசின் தொற்று காலம் 2 முதல் 14 நாட்கள் வரையாகக் கருதப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்றுடன் உறுதிப்படுத்தப்பட்ட நபருடனான கடைசித் தொடர்பைத் தொடர்ந்து முதல் பத்து நாட்களில் மேற்சொன்ன எந்த சுவாசநோய் அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடன் உங்கள் வைத்தியரை நாட வேண்டும்.

இவ்வைரஸ் தொற்றின் பரவலானது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. இது ஒரு சுவாசத் தொற்றாகும். இருமல் அல்லது தும்மும் போது ஏற்படும் சுவாசத் துளிகள் மூலமாகவும் கண்ணீர் மூலமாகவும் இவ்வைரஸ் பரவுவதாக அறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஆனால் எந்த அறிகுறிகளும் இல்லாமலுள்ளோர் மூலமும் பரவலாம் என நம்பப்படுகிறது. மேலும் மலத்தினாலும் பரவுவதாக புதிதாக அறியப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ் தொற்று நோயை அடையாளம் காண ஏதாவது வழி இருக்கிறதா?

உங்களில் கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய மூக்கு மற்றும் தொண்டை மாதிரி (swab culture) மற்றும் குருதிப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளி இனங்காணப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்படுவதன் மூலமே நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

முதற் படியாக சாதாரணமான தடிமன், காய்ச்சல்போலவே இந்நோய்க்கான சிகிச்சையும் மருத்துவர்களால் அளிக்கப்படும். நோய்த் தொற்றின் போது அதிக ஓய்வைப் பெற வேண்டும். அதிக திரவங்களைக் குடிக்க வேண்டும். தொண்டை வலி மற்றும் காய்ச்சலுக்கு மேலதிக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ள வேண்டும்.

இது ஒரு வைரஸ் தொற்று. தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) பயனற்றவை. அன்டிவைரல் மாத்திரைகளை (anti viral drugs) பயன்படுத்தலாம். அவை நோயின் தாக்கத்தைக் குறைக்க வல்லவை, ஆனால் முற்றாகக் குணப்படுத்தாது.

இன்னும் பாதுகாப்பு ஏற்படுத்தும் தடுப்பூசி கண்டறியப்படவில்லை. கைகழுவும் சுகாதாரமே தாரக மந்திரமாக அறியப்பட்டுள்ளது. இருமல் மற்றும் தும்மும் போது பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும். பயன்படுத்திய திசுக்களை (tissues) குப்பைத் தொட்டியில் உரிய முறையில் போடவும்.

நோய்த் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளுக்குப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் அல்லது அல்க​ேஹால் சார்ந்த கைச்சுத்திகரிப்பு திரவம் மூலம் (hand sanitizers) குறைந்தது 20 விநாடிகளுக்கு கழுவ வேண்டும். அடிக்கடி நோயாளி தொட்ட பொருள்கள் மற்றும் அவற்றின் மேற்பரப்புகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள். கழுவப்படாத கைகளால் உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும். நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

நோய்த் தொற்று இருக்கும் வரை , சனநெரிசல் உள்ள பொது இடங்களுக்குச் செல்வதையும் திருவிழாக்களையும் தவிர்ப்பது நல்லது.

மிகக்கவனமாக இருக்க வேண்டியோர் வயோதிபர்கள், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள், தொடர்நோயாளிகள் (patient with chronic diseases) போன்றோராவர்.

பாதிக்கப்பட்ட நபர் ஏறக்குறைய 6 அடி (2மீற்றர்)க்குள் அல்லது கொரோனாவைரஸ் பராமரிப்பு தனிப்படுத்தப்பட்ட அறைக்குள் உள்ளவர்களிடம் நேரடி தொடர்பு உள்ளோர் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார தற்காப்பு அணிகலன்களை அணிவது அவசியம்.


Add new comment

Or log in with...